கடந்த 2013ம் ஆண்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவான படம் ராஞ்சனா. நடிகர் தனுஷ் இந்தியில் நாயகனாக அறிமுகமான முதல் படமும் இதுதான். ராஞ்சனா என்கிற இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்தார்.
இந்தியில் வெளியான ராஞ்சனா சூப்பர் ஹிட் படமாக இருந்தது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர். ராஞ்சனா படம் திரைக்கு வந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரி ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸ்சை தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி இருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான படத்தின் கிளைமாக்ஸ் இந்த படத்தில் இல்லை.
இதைத்தொடர்ந்து ராஞ்சனா படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் மாற்றுவது குறித்த என்னிடம் எதுவும் கேட்காமலேயே மாற்றி வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் எனது படைப்பை அவமரியாதை செய்து விட்டார்கள். இதனால் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். இது புதுமை அல்ல, படைப்பாளிக்கு ஏற்பட்டஅவமானம் என்று அப்படக்குழுவை இயக்குனர் ஆனந்த் எல் ராய் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ரி ரிலீஸ் ஆன ராஞ்சனா படத்திற்கு அந்த படத்தில் நாயகனாக நடித்த நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஏ ஐ தொழில்நுட்ப மூலம் மாற்றி அமைக்கப்பட்ட கிளைமாக்ஸூடன் வந்துள்ள ராஞ்சனா படம் என்னை முழுமையாக தொந்தரவு செய்துவிட்டது.
இந்த மாற்று முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினர் என் கருத்தை மீறி இதை வெளியிட்டுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓகே சொன்ன ராஞ்சனா படம் இது இல்லை. திரைப்படங்களையோ அல்லது உள்ளடக்கத்தையோ மாற்ற ஏஐ பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் மிகவும் கவலையளிக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.
ஏஐ மூலம் செய்யப்படும் இவ்வகை மாற்றங்கள் சினிமாவை அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இது போன்ற நடைமுறைகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அந்த பதிவில் நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார். ராஞ்சனா படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அட்ரங்கி ரே என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் தற்போது தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





