கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அவரது இயற்பெயர் சிவாஜி ராவ். ஆனால் அவரது பெயரை ரஜினிகாந்த் என மாற்றியவர் இயக்குனர் கே பாலசந்தர் தான். பிறகு தனது படத்தில் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தார்.
முதலில் வில்லன் கேரக்டரிலும் பிறகு ஹீரோவாகவும் மாறிய ரஜினிக்கு அவரது சினிமா பயணத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முரட்டுக்காளை படம்தான். அதன் பிறகு மசாலா கதை படங்களில் ரஜினி அதிகமாக நடிக்க ஆரம்பித்தார். பிறகு அதுவே அவரது வெற்றியின் தாரக மந்திரமாக மாறிவிட்டது.
தமது சினிமா பயணத்தில் தற்போது 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நடிகர் ரஜினி மொத்தம் 171 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கூலி அவரது 171வது படமாகும். இப்போது அவர் நடித்து வரும் ஜெயிலர் 2 படம் 172வது படமாகும். அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 12ம் தேதி தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 12ம் தேதி அவர் நடித்த படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இதில் நடிகர் சிவாஜி கணேசனும் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா முதல் பாகத்திலேயே நீலாம்பரி கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போது எல்லா படங்களுமே 2.0 என 2ம் பாகமாக எடுக்கிறார்கள். அதேபோல் ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.
நீலாம்பரி என்ற டைட்டிலில் படையப்பா 2 படத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால் நிச்சயமாக படையப்பா படத்தின் 2ம் பாகமாக நீலாம்பரி படம் வரும். அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என்று ரஜினிகாந்த் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் மீண்டும் நீலாம்பரியாக நடிகை ரம்யா கிருஷ்ணனே நடிப்பாரா, அல்லது ரஜினியின் முதலில் விரும்பிய ஐஸ்வர்யா ராய் நடிப்பாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.





