தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் காதல் கொண்டேன். இந்த படமும் பெரிய வரவேற்பை பெற்றது. பிறகு திருடா திருடி திருவிளையாடல் ஆரம்பம் சுள்ளான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என பல படங்களில் நடித்து தனுஷ் பிரபல நடிகராக மாறினார்.
தொடர்ந்து தனுஷ் நடித்த புதுப்பேட்டை பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் போன்ற படங்கள் அவரை முன்னணி நடிகராக மாற்றியது. தனது படங்களில் சொந்தக் குரலில் பாடல்களை பாடிய தனுஷ் பிறகு படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்தார். நடிகர் பாடகர் தயாரிப்பாளர் ஆன தனுஷ், ப பாண்டி என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.
அப்பா கஸ்தூரி ராஜா அண்ணன் செல்வராகவன் போலவே இயக்குனராக மாறிய தனுஷ் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான ராயன் படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இது தனுஷ் நடித்த 50வது படம் என்ற நிலையில், ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. ஏஆர் ரகுமான் இசை படத்தின் அபார வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
அதன்பிறகு தனுஷ் இயக்கத்தில் 3வது படமாக வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தனது அக்கா மகன் பவிஷ் என்ற இளைஞரை இந்த படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார் தனுஷ். கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் பலத்த தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து தனுஷ் இயக்கிய இட்லி கடை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இப்போது கார் ரேஸில் பிஸியாக வெளிநாட்டில் இருக்கும் நடிகர் அஜீத்குமார் அக்டோபர் மாதத்துக்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் சூழல் உருவாகி வருகிறது.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் படம் இயக்குவது குறித்து நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். இதுபற்றி நடிகர் தனுஷ் கூறுகையில், நான் இயக்கும் படத்தில் நடிகர் அஜீத்குமாருடன் நானும் சில காட்சிகளில் நடிப்பேன் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அந்த படத்தில் ஒரு காட்சியில் கூட நான் வரமாட்டேன் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





