இப்போதெல்லாம் பல நடிகர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது பேஷனாகி விட்டது. குறிப்பாக பான் இந்தியா படங்களில் நட்சத்திர ஹீரோக்கள் பலர் ஒன்றாக சேர்ந்து நடிப்பது வணிக ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபத்தை தருகிறது. அதே நேரத்தில் சில நாட்கள் கால்ஷீட்டுக்கு பல கோடி ரூபாய் சம்பளமும் அந்த நட்சத்திர ஹீரோக்களுக்கு கிடைத்து விடுகிறது.
ஆனால் கேமியோ ரோல் செய்யும் நட்சத்திர நடிகர்கள் கூலி படத்தில் வந்த உபேந்திரா அமீர்கான் போல உப்பு சப்பில்லாத காட்சிகளில் வரும் பட்சத்தில் அவர்களது கேமியோ ரோல் கேலிக்கூத்தாகி விடுகிறது. சில காட்சிகளாக இருந்தாலும் அது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அல்லது உற்சாகப்படுத்தும் விதமாக இருப்பது மிக முக்கியம்.
குறிப்பாக விக்ரம் படத்தில் சூர்யாவின் கேமியோ பேசப்பட்டது. அதே போல் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் கேமியோ பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அப்படி நல்ல ஒர்த் ஆன காட்சிகளில் அவர்கள் என்ட்ரி கொடுத்தால்தான் அது படத்துக்கும் பக்கபலமாக இருக்கும். ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு காட்சியாக மனதில் நிற்கும்.
அந்த வகையில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் இப்போது ஒரு படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இவர் மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு தமிழ் இந்தி மொழிகளிலும் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இது சூர்யாவின் 45வது படம். விரைவில் கருப்பு படம் திரைக்கு வர உள்ளது. மார்ச் 19 என திட்டமிடடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு நடிகர் சூர்யாவின் 46வது படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா 46 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வயது ஆணுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வுகளை மையமாக கொண்ட கதை என்று தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் சூர்யா 46 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிகர் துல்கர் சல்மான் நேரில் வந்திருக்கிறார். அப்போது நடிகர் சூர்யாவும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த ஒரு முக்கியமான காட்சியை இயக்குனர் வெங்கி அட்லூரி படமாக்கி இருக்கிறார். அதனால் இந்த படத்தில் துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடிப்பது உறுதியாகி விட்டது.





