இயக்குனர் பாண்டிராஜ், தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான மெரினா படத்தை இயக்கியவர் பாண்டிராஜ்தான். அதே போல் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன், தங்கையாக நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவரும் இயக்குனர் பாண்டிராஜ்தான்.
அதே போல் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் டைரக்டர் பாண்டிராஜ்தான். இப்படி பல வெற்றிப் படங்களை தந்துக்கொண்டிருக்கும் பாண்டிராஜ் படங்களில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தனது 50வது படம் மகாராஜா தந்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டிராஜ் படத்தில்தான் அடுத்து நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
ஆனால் விஜய் சேதுபதி நடிக்க உள்ள இந்த படத்தில், ஏற்கனவே நடிக்க கமிட் ஆனவர்தான் நடிகர் ஜெயம் ரவி. சில மாதங்களுக்கு முன்பே, இயக்குனர் பாண்டிராஜ், ஜெயம் ரவியிடம் கதை சொல்லி, அவருக்கும் அந்த கதை மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. தொடர்ந்து ஜெயம் ரவியின் படங்களை தயாரித்து வரும் அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார், இந்த படத்தையும் தயாரிக்க ஒப்புதல் தந்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் இந்த படம், அப்படியே டிராப் ஆகி விட்டது. அதற்கு முக்கிய காரணம், முழுக்காரணம் யாரென்றால் அது நடிகர் ஜெயம் ரவிதான். தொடர்ந்து இறைவன், அகிலன், சைரன் என பிளாப் படங்களை தந்து கொண்டிருக்கிற ஜெயம் ரவிக்கு, இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிற படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில், அவரே அதை கெடுத்துக்கொண்டது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது, ஜெயம் ரவி இதுவரை அவர் நடித்த படங்களுக்கு சம்பளமாக, ரூ. 15 கோடிதான் சம்பளமாக வாங்கிக்கொண்டு இருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகும் படங்களை தயாரிக்கும் அவரது மாமியார், தயாரிப்பாளர் என்பதால் ரூ. 15 கோடி என மருமகன் ஜெயம் ரவிக்கு சம்பளம் தந்திருக்கிறார். இந்த சூழலில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு தனது சம்பளத்தை திடீரென ரூ. 25 கோடியாக உயர்த்தி இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
இப்படி திடீரென ஜெயம் ரவி தனது சம்பளத்தை ரூ. 10 கோடி வரை உயர்த்தியதால், படத்தின் மொத்த பட்ஜெட் 52 கோடி ரூபாயை கடந்துவிட்டது. இந்த படத்தை இயக்க ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ், ரூ. 1 கோடி அட்வான்ஸ் பெற்ற நிலையில், அதை திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த படத்தை விட்டு விலகி விட்டார். இப்போது நடிகர் விஜய் சேதுபதி தனது 51வது படமாக, ஜெயம் ரவி நடிக்க வேண்டிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





