தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது 74வது வயதிலும் இன்னும் படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்றைய அரசியலில் வெற்றிடம் இருப்பதால் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ஒருமுறை ஆவேசமாக பேசியிருந்தார்.
அதன்பிறகு சில மாதங்கள் கழித்து எனக்கு உடல்நலம் சரியில்லை. என் அரசியல் பயணத்துக்காக என் ரசிகர்களை பலிகொடுக்க விரும்பவில்லை என்று சொல்லி அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அரசியலுக்கு வர உடல்நிலை சரியில்லை என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டே இருக்கிறார். ரூ. 150 கோடிக்கு மேல் சம்பளமும் வாங்கி கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி விஜய் இடையே யார் சூப்பர் ஸ்டார் என்ற விவகாரம் கிளம்பியது. அதிக வசூல் தரும் படங்களை தருவதால் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறியதால் இந்த விவகாரம் கோலிவுட்டில் அனலை கிளப்பியது. இதற்கிடையே கழுகு காக்கா கதை சொல்லி விஜயை காக்கா என்றும் ரஜினியை கழுகு என்றும் ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
பொதுவாக அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என்று பல ஆண்டுகளுக்கு கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த் கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கூட்டத்தில் உயிரிழப்பு சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவத்துக்காக இரங்கல் தெரிவித்து இருந்தார். ஒரு மூத்த நடிகர் என்ற முறையில் அவர் வெளியிட்ட இந்த இரங்கல் பதிவு ரசிகர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு குரல் கொடுக்காத ரஜினிகாந்த், நடிகர் விஜய் விவகாரத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பிய யூடியூப் விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, மிகவும் வேதனையாக இருக்கிறது என கழுகு ஆதங்கம் காட்டியிருக்கிறார்.
கும்பமேளா சம்பவம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விமான சாகச நிகழ்ச்சிகள் கவின் ஆணவப் படுகொலை இவற்றுக்கெல்லாம் அவர் வாயை திறக்கவே இல்லை. இது சம்பந்தமாக நிருபர்கள் கேள்வி கேட்ட போதும் நோ கமெண்ட்ஸ் சொல்லிவிட்டார். அரசியல் பேசமாட்டேன் என எத்தனை தடவை சொல்வது என கோபமாக பதில் சொல்வார். ஆனால் இன்றைக்கு மட்டும் கழுகுக்கு திடீரென கண்ணு வேர்த்துடுச்சு என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





