தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கலையரசன். பா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம்தான் கலையரசன் அறிமுகமான முதல் படம். அடுத்து பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் சார்பட்டா பரம்பரை கபாலி உள்ளிட்ட படங்களில் கலையரசன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார்.
அத்துடன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்திலும் கலையரசன் நாயகனாக நடித்திருந்தார். தானா சேர்ந்த கூட்டம் டார்லிங் உரு அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் கலையரசன் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் உருவான டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படம் 7 ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.
எந்த கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பான நேர்த்தியான நடிப்பை தரும் நடிகராக கலையரசன் இருக்கிறார். ஆனால் அவரால் ஒரு முன்னணி ஹீரோவாக ஜெயிக்க முடியவில்லை. இன்னும் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் ஆக தான் அவர் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ஆனால் நல்ல நடிகர் என்ற வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இயக்குனர் பா ரஞ்சித்தின் நெருக்கமான நண்பராக கலையரசன் இருந்து வருகிறார். அதனால் பா ரஞ்சித் இயக்கும் படங்களில் கலையரசன் தொடர்ந்து நடித்தும் வருகிறார். எதை செய்தாலும் பா ரஞ்சித்திடம் கேட்டுவிட்டுதான் செய்வேன். அந்தளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்து வருகிறேன் என்றும் நடிகர் கலையரசன், பா ரஞ்சித்துடன் உள்ள நட்பு குறித்தும் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் டிரண்டிங் என்ற படத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கலையரசன் கூறியதாவது, நான் 80 லட்சம் 1 கோடி ரூபாய் என்று என்னுடைய மேனேஜர் மூலம் சம்பளம் கேட்பதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். எனக்கு மேனேஜரே கிடையாது. எனக்கு அத்தனை சம்பளம் யாரும் தருவதில்லை. நான் நடித்த பல படங்களுக்கு சம்பளமே வந்ததில்லை.
தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமான அளவில் இருக்கிறது. நான் இயக்குனர் பா ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. பலரும் என்னை நடிக்க அழைக்க யோசிக்கிறார்கள் என்று நடிகர் கலையரசன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





