சமீபத்தில் தான் பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி தனது 88வது வயதில் காலமானார். பல்வேறு மொழிகளில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கானக்குயில் எஸ் ஜானகி மறைவால் ரசிகர்கள் வேதனையடைந்தனர். தற்போது எஸ் ஜானகியை தொடர்ந்து பழம்பெரும் பாடகி ஜமுனா ராணியும் மறைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
கடந்த 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனாராணி அவரது 7வது வயதில் தியாகய்யா என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். 7 வயது சிறுமியாக பின்னணி பாடகியாக களத்தில் இறங்கிய பெருமைக்குரியவர் ஜமுனராணி என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் நாயகன். இந்தப் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலை ஜமுனா ராணி பாடியிருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு இந்த பாடல் சொன்னால்தான் பலருக்கும் ஜமுனா ராணியை தெரியவரும்.
குழந்தைத்தனமான குரலுக்கு சொந்தக்காரர் பாடகி ஜமுனா ராணி. தமிழில் 1952 ல் வெளியான கல்யாணி என்ற படத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் பாடினார். காளை வயசு கட்டான சைசு செந்தமிழ் தேன்மொழியாள் பாட்டொன்று கேட்டேன் காட்டில் மரம் சின்ன சின்ன சிட்டு காவேரி தாயே உங்க மனசு ஒரு தனுசு தாரா தாரா வந்தாரா போன்ற பாடல்களை பாடியவர்.
மேலும், எந்த நாளும் சந்தோசமே யாரடி நீ மோகினி குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே மாமா மாமா ஆசையும் என் நேசமும் என அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் பாடல்களை ஏராளமாக பாடியவர் பாடகி ஜமுனா ராணி என்பது குறிப்பிடத்தக்கது. 88 வயதான நிலையில் உடல் மூப்பு காரணமாக அவர் மறைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





