இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் திரிஷா சிம்பு உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படம் வெளியாகி நீண்ட நாட்களாகி விட்டது. இதற்கிடையே கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆகவும் சட்டசபை தேர்தல் பணிகளிலும் பிஸியாக இருந்த நிலையில் மீண்டும் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தையும் நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்து வருகிறார். ஏற்கனவே ஸ்டாண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமல் கமிட் ஆகியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பண்ணையாரும் பத்மினியும் சித்தா வீரதீர சூரன் 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதில் 2 விதமான கதைகளை அருண்குமார் கமல்ஹாசனிடம் கூறிய நிலையில் அதில் ஒரு கதையை அவர் ஓகே சொல்லி விட்டார்.
இதையடுத்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு அமைத்து தரப்பட்டது போல ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் அருண்குமாருக்கும் அலுவலகம் அமைத்து தரப்பட்டுள்ளது. அவர் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளை அங்கிருந்து மேற்கொண்டு வருகிறார். இந்த படத்துக்காக அவருக்கு ரூ. 4 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆன நிலையில் இப்போது அருண்குமார் இயக்கத்திலும் நடிக்க தயாராகி வருகிறார். ஒரே நேரத்தில் 2 படங்களிலும் அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்ள கமல் திட்டமிட்டுள்ளார். இதில் அருண்குமார் இயக்கும் படம் முழுவதும் லைவ் லொக்கேஷனில் படமாக்கப்பட உள்ளது.
அன்பறிவ் படம் ஆக்சன் பிலிம் என்பதால் டெக்னிக்கலாகவும் கிரீன்மேட் முறையிலும் அந்த படப்பிடிப்பு அதிகளவில் நடத்தப்படுகிறது. அதனால் இந்த 2 படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வரும் 6 மாதங்கள் இடைவெளிக்குள் இந்த 2 படங்களையும் திரைக்கு கொண்டு வர நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





