தமிழ் சினிமா உலகை பொருத்த வரை, நடிப்பில் அசகாய சூரன் என்றால் அது அன்று முதல் இன்று வரை கமல்ஹாசன் தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு, நடிப்பில் கமல்ஹாசன் மட்டுமே முன்னிலைப்படுத்த படுகிறார். அவரது அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது கொள்கை நிலைப்பாடுகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் நடிப்பை பொருத்த வரை, யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு, நடிப்பில் அவர் ‘உலக நாயகன்’தான்.
மாறுபட்ட கதைக் களங்களையும், வித்யாசமான கதாபாத்திரங்களிலும் அவர் தன் திறமையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தாலும், இப்போதும் ‘கமர்ஷியல்’ படங்களே, அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தருகிறது. குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’, பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. தற்போது, இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமல், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘நாயகன்’ படத்துக்கு பிறகு, மணிரத்னத்துடன், கமல் கோர்ப்பதால் இந்த படம், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதற்கிடையே கமல்ஹாசனின் பழைய ஹிட் படங்களை துாசி தட்டி, மீண்டும் ரிலீஸ் செய்யும் பணியையும், கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் செய்து வருகிறது.
அதன்படி, வேட்டையாடு விளையாடு படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, கமல் இரட்டை வேடங்களில் நடித்த ‘ஆளவந்தான்’ படமும் திரைக்கு வர உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து, கடந்த 1987ம் ஆண்டில், அதாவது 36 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த, ‘பேசும் படம்’ படமும் ரி ரீலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம், தெலுங்கில் ‘புஷ்பக்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.
பேசும் படம் படத்தை, சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார். 36 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம், ரூ. 35 லட்சம் முதலீட்டில் எடுக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வேலை இல்லாத, வறுமை நிறைந்த இளைஞராக கமல் நடித்திருப்பார். கதாநாயகியாக அமலா நடித்திருப்பார். இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், ‘பேசும் படம்’ என்றாலும், இந்த படத்தில் யாருமே பேச மாட்டார்கள் என்பதுதான் ஹைலைட்.
நடிகர் கமல்ஹாசன், நடிக்க வந்த துவக்கத்தில் இருந்தே பல வித்யாசமான படங்களில் ஈடுபட்டார். வித்யாசமான முயற்சிகளிலும் ஈடுபட்டார். ஆனால், அன்றைய காலகட்டத்தில், அப்போதைய ரசிகர்கள் அந்த படங்கள் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை. ஆனால், இப்போது கமல் நடிக்கும் படங்கள் மீதும், ரசிகர்களுக்கு அதிக கவனமும், ஈர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக, ‘அன்பே சிவம்’ தியேட்டர்களில் ஓடாத நிலையில், இப்போது ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. அதனால், மீண்டும் தமிழில் ரிலீஸ் ஆகும் ‘பேசும் படம்’ வசூல், நூறு கோடிகளை தாண்டும் என கருதப்படுகிறது.





