நடிகர் கமல்ஹாசன் 69 வயதிலும் டாப் நடிகராக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகிறாா். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்த பிறகு, புது ரத்தம் பாய்ச்சியது போல சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்போது இந்தியன் 3, தக்லைப், கல்கி 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, என்று தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து, மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். மக்கள் செல்வாக்கு இல்லாத இவரது கட்சிக்கு தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியே கிடைத்து வருகிறது.
கட்சி துவங்கிய புதிதில் ஸ்டாலினையும், திமுகவையும் விமர்சித்த கமல்ஹாசன் இன்று, திமுக கூட்டணிக்கு ஆதரவாளராக மாறியிருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இவரது கட்சிக்கே மக்கள் ஓட்டுப் போடாத போது, இவர் சொல்லியா திமுகவுக்கு மக்கள் ஓட்டுப் போட போகிறார்கள் என்று எதிர்கட்சியினர் கிண்டலடித்தனர்.
ஆனால் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்யாமல் இருந்திருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக இதே 40 தொகுதிகளை பெற்றிருக்கும். ஏனெனில் திமுகவின் வெற்றியை விட, பாஜக ஒரு தொகுதியிலும் வந்துவிடக் கூடாது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் தீர்மானமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சியில் கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு, சமீபத்தில் இந்தியன் 2 கொடுத்த பலத்த அடி காரணமாக, கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சனங்களில் சிக்கி வருகிறார். இந்த சூழலில், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி பேரை கெடுத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. ஏனெனில் கடந்த பிக்பாஸ் சீசன் 7ல் அவரை பற்றிய விமர்சனங்கள் பலத்த சர்ச்சைகளை கிளப்பியது.
குறிப்பாக மாயா, பூர்ணிமாவுக்கு அவர் ஆதரவாக நடந்துக்கொண்டது, பிரதீப்பை ரெட் காா்டு கொடுத்து வெளியேற்றியது பலத்த சர்ச்சையை கிளப்பியது. அரசியல், சினிமா, பிக்பாஸ் என தொடர்ந்து விமர்சனங்களில் சிக்கிய கமல்ஹாசனை பார்த்த பலரும், இதெல்லாம் இவருக்கு தேவையா என்று கேட்டுக்கொண்டே இருப்பதால், ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வேண்டாம் என்ற ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து, இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.





