இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அவர் படத்தில் காட்டிய பிரமாண்டம் மட்டுமின்றி அவர் எடுத்துக்கொண்ட கதைக்களமும், கதையின் மையக் கருவும்தான். இதில் பாய்ஸ் படம் மட்டுமே, இளம் வயது காதலர்களின் உணர்வுகளை பற்றிய படமாக இருந்தது.
மற்றபடி இந்தியன், சிவாஜி, முதல்வன், ஜெண்டில்மேன் போன்ற படங்களில் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வே அதிகமாக இருந்தது. கருப்பு பணம், கல்வி வியாபாரம், லஞ்சம் ஊழல், அரசியல்வாதிகளின் நிலை போன்ற விஷயங்களை அவரது படங்களில் கையாண்டு இருந்தார். அவ்வப்போது ஜீன்ஸ், நண்பன் போன்ற ஜாலியான படங்களையும் ஷங்கர் தந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
ரஜினி நடிப்பில் உருவான படம் எந்திரன் (ரோபோ). இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதில் அறிவியல் விஞ்ஞானியாக சயன்டிஸ்ட் வசீகரா என்ற கேரக்டரில் ஒரு ரஜினியும், ரோபோவாக சிட்டி என்ற கேரக்டரில் ஒரு ரஜினியும் நடித்திருந்தனர். ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயந்திரம் ரோபோ, ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராயை காதலிப்பதுதான் கதை.
இந்த படத்தில் ரஜினியின் மாஸ் நடிப்பும், ரோபோ ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் படத்தில் பெரிய அளவில் கொண்டு சென்றது. குறிப்பாக இறுதியில் 100 ரஜினிகள், ரோபோக்களாக வருவதும், அவற்றை அழிக்கவும், ஐஸ்வர்யா ராயை காப்பாற்றவும் சயன்டிஸ்ட் ரஜினிகாந்த் எடுக்கும் முயற்சிகளும் படத்தை விறுவிறுப்பாக காட்டியிருந்தது. கிளைமாக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படம் போல இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.
ஆனால் எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது, ரஜினிகாந்த் அல்ல. உலகநாயகன் கமல்ஹாசன்தான். அவரை தான் இயக்குனர் ஷங்கர் முதலில் நேரில் சந்தித்து கதை சொன்னார். அதற்காக பிரத்யேக போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது, ஆனால் திடீரென அந்த படத்தில் நடிக்க கமல் மறுத்துவிட்டார். அதன்பிறகுதான், ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் நடித்தார்.
இதுகுறித்து, சமீபத்தில் இந்தியன் 2 பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல் வெளிப்படையாக பேசியிருக்கிறார். கமல் இதுபற்றி கூறுகையில், எந்திரன் படத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் முதலில் என்னை தான் அணுகினார். ஆனால் அப்போது கால்ஷீட், சம்பளம், அப்போதைய மார்க்கெட் போன்ற பிரச்னைகளால் நான் நடிக்காமல் விலகி விட்டேன். ஷங்கர் அந்த படத்தை கைவிட்டு விடுவார் என நினைத்தேன். ஆனால் ரஜினியை வைத்து எடுத்து, பெரிய ஹிட் கொடுத்து விட்டார், என்று கூறியிருக்கிறார் கமல்.





