ஒரு திரைப்படத்தின் காட்சியில் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த சூரிதான் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஏராளமான திரைப்படங்களில் சைட் ரோலில் வந்த அவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது.
அதில் இடம்பெற்ற அந்த பரோட்டா காமெடியை இன்றுவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த ஒரே ஒரு காமெடி மூலம் உச்சத்திற்கு சென்ற சூரிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு நல்ல முறையில் தனது வெளிபாட்டை காட்டினார் சூரி.
குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுடன் சேரும் வாய்ப்பையும் அவர் பெற்றார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து அடித்த லூட்டிகள் திரையரங்குகளில் சிரிப்பு பட்டாசுகளாய் வெடித்து சிதறின. இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வந்த சூரிக்கு, நடுவே சோதனை காலம் அமைந்தது.
அவரது காமெடி எடுபடவில்லை என்று பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். இப்படியான சூழலில் தான் விடுதலை படத்தில் கதாநாயகனாகும் அறிய வாய்ப்பை சூரிக்கு வழங்கினார் வெற்றிமாறன். படத்தில் குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் சூரி. அதற்கு முன்பு எந்த ஒரு திரைப்படத்திலும் அப்படி ஒரு சூரியை பார்த்ததில்லை என்று பலரும் பாராட்டினர்.
இங்கிருந்து தான் சூரியின் ஹீரோ பயணம் ஆரம்பித்தது. இறுதியாக வெளிவந்த கருடன் திரைப்படத்திலும் அது நீடித்தது. முந்தைய திரைப்படத்தை விட இதில் மாஸ் எலமெண்டுகள் சூரிக்காக வைக்கப்பட்டிருக்க, நடிகர் அடித்து பட்டையை கிளப்பினார். வெற்றிமாறன் அதை எழுதி தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் சூரி நடிப்பில் அடுத்ததாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழுமலை, விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவை வெளியாகின்றன. இதனைத் தொடர்ந்து ஒரு வெப் சீரிஸில் சூரி நடிக்க இருக்கிறார். முதன்முறையாக அவர் இதற்காக கதை எழுதுகிறார். மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் தான் இந்த படத்தை எடுக்க உள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு இந்த சீரிஸ் எடுக்கப்படுகிறது.





