விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதனால் அவரை கலக்கப்போவது யாரு (கேபிஒய்) பாலா என்றே மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமாகி விட்டார். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். இப்போது சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.
நடிகர் கேபிஒய் பாலா, இப்போதுதான் வளர்ந்துவருகிறார். இளைஞராக இவருக்குள் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் மிக அதிகமாக இருந்து வருகிறது. அதனால் தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் வருவாயை கொண்டு, லட்சக்கணக்கில் மக்களுக்கு நல உதவித்திட்டங்களை வழங்கி வருகிறார்.
முதல்கட்டமாக சத்தியமங்கலம், அந்தியூர் பகுதிகளில் உள்ள மலைகிராம மக்களின் பயன்பாட்டுக்காக இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை தனது சொந்த செலவில் வாங்கிக்கொடுத்து இருக்கிறார். இதுதவிர, மாற்றுத்திறனாளி பட்டதாரி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் ஒன்றை சில வாரங்களுக்கு முன் வாங்கிக்கொடுத்தார். டிசம்பர் மாதம் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை தனது சொந்த பணத்தை நிவாரணமாக கொடுத்து உதவினார்.
அடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர், தனக்கு சைக்கிள் வாங்கித் தரக்கூட ஆளில்லை என்று வருத்தமாக கூறிய வீடியோ வைரலானது. இதைப்பார்த்த கேபிஒய் பாலா, அவருக்கு புதியதாக பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்து அசத்தினார். மேலும் வறுமையில் உள்ள பெண் ஒருவருக்கு புதிய ஆட்டோ ஒன்றை இரு தினங்களுக்கு முன்பு வாங்கிக் கொடுத்தார்.
இப்படி தொடர்ந்து கேபிஒய் பாலா, உதவி வருவதைப் பார்த்து பலரும் அவரை கலாய்க்கின்றனர். மிக மோசமாக விமர்சனமும் செய்கின்றனர். இப்படியே அடுத்தவருக்கு வருகிற வருமானத்தை எல்லாம் கொடுத்து விட்டால், கடைசியில் உனக்கு ஒண்ணுமே மிஞ்சாது. கடைசியில் நீ உதவி என்று கேட்டால் யாருமே உனக்கு உதவ மாட்டார்கள். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும் என்றும் கூறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், நல்லது செய்தும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டு, விமர்சனத்தில் சிக்கியிருக்கும் கேபிஒய் பாலா, அடுத்தக்கட்டமாக மற்றொரு முக்கிய திட்டத்தை அறிவித்து இருக்கிறார். எனது அடுத்த இலக்கு அதுதான் என்றும் கூறியிருக்கிறார். அதாவது மருத்துவமனை ஒன்றை கட்டிவிட்டு, அங்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என தன் கடமையில் கண்ணாக இருக்கிறார் கேபிஒய் பாலா என ஒரு சிலர் அவரை பாராட்டவும் செய்கின்றனர்.





