கடந்த 1990களில் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்வர்ணமால்யா. பரதநாட்டிய கலைஞர். அலைபாயுதே மொழி எங்கள் அண்ணா வெள்ளித்திரை புலிவால் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்வர்ணமால்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மட்டும் இல்லை. அம்பேத்கரின் பிறந்த நாளும்தான். என்ன ஒரு அருமையான நாள். இன்று காலையிலேயே சில இளம் ஆய்வு மாணவர்களுடன் சேர்ந்து எனது வீட்டுக்கு அருகே இருக்கும் முதல்வர் படைப்பதற்கு சென்றிருந்தேன்.
அதை பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது. அமைதியான சூழல் அங்கே நிலவுகிறது. முதல்வர் படைப்பகத்தில் படிக்கலாம் படைக்கலாம் கலந்தாலோசனை செய்யலாம். இதையெல்லாம் பார்த்துவிட்டு சுதந்திரம் என்றால் என்னவென்ற கேள்வி எனக்குள் வந்தது. நமக்கான தளத்தை கொடுப்பதுதான் சுதந்திரம். அந்த தளமானது எந்தவிதமான திணிப்பும் கட்டாயமும் என்று எதுவும் இல்லாமல் பயமும் இல்லாமல் நமது உரிமைகளை நிலை நாட்டுவது ஆகும்.
அதனை தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளாக நமக்கு கொடுத்திருக்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. இந்தியாவில் மற்ற இடங்களை பார்க்கும் போது எவ்வளவு ஒரு அழுத்தமான சூழலில் அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தமிழ்நாட்டின் தொன்மையை நினைத்து நமக்கு பெருமையாக இருக்கிறது.
மரபு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். மறுக்கப்படக்கூடாது. இன்னும் 9 நாட்களில் தமிழ்நாட்டின் வரலாற்றினை மீண்டும் எழுதுவதற்கான நேரம் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மாற்றம் தேவையா என்றால் அது இல்லை. மாற்றத்தை தேடி போனால் ஏமாற்றம் வந்துவிடும். நமக்கு இருக்கும் முன்னேற்றத்தை பார்க்கையில் மாற்றம் தேவையில்லை, முன்னேற்றம் தான் தேவை.
சமூக நீதியை பின்பற்றக்கூடிய தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் என்று அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். விஜய் தமிழ்நாட்டில் அரசியல் களத்துக்கு வந்துள்ள நிலையில், மாற்றம் தான் தேவை என்று அவரது ரசிகர்களும் தமிழக மக்களும் தவெக கட்சிக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். ஆனால் மாற்றம் தேவையில்லை என்று நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கி ஸ்வர்ணமால்யா இந்த வீடியோ வெளியிட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.





