இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சென்னை ஹைதராபாத் மும்பை, பெங்களூரு என ஊர் ஊராகச் சென்று நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் பிரமோஷன் செய்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அதன் பிறகு பேசிய நடிகர் கமல்ஹாசன், ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் தான் அவர் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று உற்சாகமாக பேசினார்.
இதையடுத்து தமிழில் இருந்து கன்னடம் மொழி தோன்றியதாக கமல் பேசியதற்கு கர்நாடக மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தக்லைஃப் படம் வெளியீடு தொடர்பாக கர்நாடகாவில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் பேனர்களை கிழித்து எறிந்து அங்குள்ள கன்னட அமைப்பு சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதனால் தக்லைஃப் படம் அங்கு ரிலீஸ் ஆகுமா என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நடிகர் கமல் கன்னட மொழி குறித்து பேசிய கருத்தை வாபஸ் பெற வேண்டும். அவர் பகிரங்கமாக கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தக்லைஃப் படத்துக்கு கர்நாடகா மாநிலத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கமல்ஹாசனின் இந்த கருத்தை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது, இதுதான் வரலாற்று உண்மை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் நடந்த தக்லைஃப் பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது அவரிடம் கன்னட மொழி சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது அதற்கு கமல்ஹாசன் கூறியதாவது, என் கருத்தை எனது அருகில் இருந்து பார்த்தால் சரியாக தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாக தோன்றும். அன்பு மிகுதியால் நான் அப்படி பேசினேன். இந்த விஷயத்தில் அவர்கள் குழம்பி உள்ளனர். மொழி பற்றி வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். மொழிகள் பற்றி பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்று நடிகர் கமல் அதிரடி பதில் தந்துள்ளார்.





