தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். 70 வயதிலும் கதாநாயகனாக நடித்து அசத்தி கொண்டிருக்கிறார். இந்தியன் 2 படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு இணைந்து நடித்துள்ள தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237வது படத்தில் அடுத்து நடிகர் கமல் நடிக்க இருக்கிறார்.
திரையுலகில் நடிகர் கமல்ஹாசன் ஒரு சகாப்தமாக பார்க்கப்படுகிறார். நடிப்பில் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாவில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர். அவரது புகழின் நிழலை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு கலைஞானியாக அவர் செயல்பட்டிருக்கிறார். இப்போதும் அவர் சினிமாவை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்ல கடுமையாக உழைக்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் அரசியலில் அவர் மிகவும் மோசமான ஒரு தோல்வியை தொடர்ந்து சந்தித்து வருகிறார். எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு அரசியலுக்கு வந்த மிக முக்கியமான நடிகர் கமல்ஹாசன்தான். ஆனால் பல சட்டசபை நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்த கமல்ஹாசனுக்கு தோல்வியே இதுவரை பரிசாக கிடைத்திருக்கிறது. ஒரு தொகுதியில் கூட அவரது மக்கள் நீதிமய்யம் வெற்றி பெறவில்லை.
ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்த அரசியல்வாதி கமல்ஹாசன், இப்போது திமுகவின் ஆதரவாளராக மாறியிருப்பது பலத்த ஏமாற்றத்தை அவரது கட்சியினருக்கே தந்திருக்கிறது. இந்த சூழலில், சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் தோல்வி குறித்து கட்சியினர் மத்தியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, நான் அரசியலில் தோற்றுப் போனேன் என்கிறார்கள். நான் எப்படி அரசியலில் தோற்றுப் போனேன் என்பதை நான் எப்படி உணர்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். நான் குறைந்த பட்சம் 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி நான் வரத் தவறினேன் என்பதுதான் எனக்கு தோல்வியாகப் படுகிறது.
அப்படி நான் வந்திருந்தால் இப்போது இங்கு நின்று பேசிக்கொண்டு இருக்கும் வார்த்தைகளும் இடமும் வேறாக இருக்கும். நான் இப்போது பேசுவது எனக்கு வாக்களிக்காத மக்களுக்காக என்று நினைக்க வேண்டாம். அவர்களும் என் மக்கள்தான் அவர்களும் என் உறவுதான் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.





