நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்பதை யாருமே மறுக்க முடியாது. உலக நாயகன் என்று போற்றக் கூடிய அளவுக்கு உலகளில் அவர் சிறந்த கலைஞர்தான் என்பதை அவர் நடித்த படங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. அவரது நிழலைக் கூட யாரும் நெருங்க முடியாத அளவுக்கு நடிப்பு துறையில் அவர் சாதித்தவர் என்றால் அது மிகையல்ல.
ஆனால் தனிப்பட்ட முறையில், அவரது குடும்ப வாழ்க்கையில் கமல்ஹாசன் பல்வேறு விதமான விமர்சனங்களை சந்தித்தவர். 2 திருமணங்களை செய்து விவாகரத்து ஆனவர். நடிகை கெளதமியுடன் பல ஆண்டுகள் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்துவிட்டு, அவரை கழட்டி விட்டவர். தன் மகளை விட வயது குறைந்த பூஜா குமாருடன் நெருக்கத்தில் இருந்தவர் என்று பல விமர்சனங்கள் அவர் மீது இருக்கின்றன.
மறைந்த நடிகை ஸ்ரீவித்யா, பிறகு நடிகை சிம்ரன், நடிகை ஆண்ட்ரியா, நடிகை பூஜாகுமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் என கமல்ஹாசனின் நெருக்கமான பெண் தோழிகளின் வட்டம் அதிகம். இது சினிமா நடிகர்களின் வழக்கமான வாழ்க்கை தான் என்றாலும், நடிகராக ஜெயித்த கமலால், சமுதாயத்தில் நல்ல மனிதராக இதனால் பெயர் வாங்க முடியாமல் போய்விட்டது.
அதே நேரத்தில் நடிகராக, நல்ல மனிதராக பெயர் வாங்கியவர் இவரது சினிமா போட்டியாளராக கூறப்படும் நடிகர் ரஜினிகாந்த் தான். லதா ரஜினிகாந்தை திருமணம் செய்தார். இதுவரை மற்ற நடிகைகள் யாருடன் ரஜினிகாந்த் கிசுகிசுக்கப்பட்டது இல்லை. அப்படியே ஓரிரு விஷயங்கள் இருந்தாலும் கமல் அளவுக்கு அது எல்லை மீறியது இல்லை. அதே போல் கமல் மகள்கள் இருவரும் இன்னும் முரட்டு சிங்கிளாக உள்ள நிலையில், ரஜினி தன் மகள்களுக்கு நல்ல தகப்பனாக முன்நின்று திருமணங்களை செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், வரும் 12ம் தேதி இந்தியன் 2 படம் ரிலீசாவதை பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அப்படி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், இந்தியன் 2 காட்டிலும், இந்தியன் 3 ரிலீஸ்க்காக நான் அதிகம் காத்திருக்கிறேன். அப்படி என்றால் இந்தியன் 2 எனக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமல்ல, இரண்டு படங்களிலுமே எனக்கு பிடித்த காட்சிகள் நிறைய இருக்கின்றன.
இந்தியன் 2 படத்தின் மூலம் என்னை தாத்தா என்று அழைக்கின்றனர். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. காந்தியை, பெரியாரை தாத்தா என்றுதான் அழைத்தார்கள். ஆம், நானும் தாத்தா தான், என்று அதில் பேசியிருக்கிறார். கடவுள் மறுப்பாளராக கமல், தன்னை ஈவேராவுடன் தாத்தா என்று ஒப்பிட்டு சொல்வதில் பெரிய தவறில்லை. ஆனால் தேசப்பிதா காந்திஜியை, தேசத்து மக்கள் காந்தி தாத்தா என்கின்றனர். அதே போல் என்னையும் தாத்தா என்று கூறுகின்றனர் என்று நடிகர் கமல், தன்னை காந்திஜியோடு ஒப்பிட்டு பேசியிருப்பதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





