லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம் வரும், 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தரப்பில் லலித்குமார் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். வரும் 19ம் தேதி லியோ படத்தை காலை 6 மணிக்கு, அல்லது 9 மணிக்கு ரசிகர் சிறப்பு காட்சி நடத்த, அரசு அனுமதி அளிக்கவில்லை,
மேலும், படம் ரிலீஸ் செய்யப்படும் நாளில் மொத்தம் 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். கூடுதல் காட்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும், அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர் காட்சி இல்லாததால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். இசை வெளியீட்டு விழாவும் நடக்கவில்லை. ரசிகர் காட்சியும் இல்லையா என பலத்த அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து, ஒரு இரவு முன்னதாக அதாவது 18ம் தேதி மாலை, 6.30 மணிக்கும், இரவு 10.30 மணிக்கும் பிரிமியர் பெய்டு ஷோ முறையில், லியோ படத்தை திரையிட. செவன் ஸ்கிரீன் தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த காட்சிகளுக்காக ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இது ஒரு விதத்தில் ரசிகர்களை திருப்திபடுத்துவதோடு கணிசமான டிக்கெட் வசூலுக்கும் வாய்ப்பாக இருந்தது.
ஆனால், ஏற்கனவே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, லியோ படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள், ரசிகர் காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால், அவர்களும் ஒரு பிளான் செய்துள்ளனர். லியோ ரிலீஸ் ஆகும் 19ம் தேதியன்று காலை 10 மணி, மதியம் 2 மணி காட்சிகள் இரண்டையும், பிரிமியர் பெய்டு ஷோக்களாக திரையிடவும், ஒரு டிக்கெட் கட்டணம் ரூ. 1500 ரூபாய் எனவும் விநியோகஸ்தர்களும் திட்டமிட்டுள்ளனர் என்பது, படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஒரு இரவு முன்னதாக 18ம் தேதி மாலை 6.30 மணி, இரவு, 10.30 மணி என இரண்டு ரசிகர் காட்சிகள், பிரிமியர் பெய்டு ஷோ நடத்தும் திட்டத்தில் இருந்து, படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் திடீரென பின்வாங்கி விட்டார். ஏனெனில், படம் ரிலீஸ் அன்று, பிரிமியம் ஷோ நடத்த விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முந்தைய நாளில் அதே பிரிமியம் ஷோக்களை நடத்தினால். அவர்களுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் என்பதால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 900 தியேட்டர்களில் லியோ ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில், இந்த பிரிமியர் ஷோக்கள் வாயிலாக கல்லா கட்ட நினைத்த ஒரு சில விநியோகஸ்தர்கள் மட்டும், 18ம் தேதி சிறப்பு காட்சிகள் நடத்த சம்மதிக்குமாறு தொடர்ந்து லலித்குமாரிடம் பேசி வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை லலித்குமார் சம்மதம் தெரிவிக்காத நிலையே நீடிக்கிறது.





