நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய பிறகு அரசியல் கூட்டங்களில் அதிகளவில் பங்கேற்கிறார். அதை விட அதிகமாக பொது நிகழ்வுகளிலும் அதிகமாக கலந்துக் கொள்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பல நேரங்களில், சமுதாயம் குறித்த தனது சிந்தனைகளை தான் முன்வைத்து பேசுகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என, 25 ஆண்டுகளாக தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பு நீடித்த நிலையில், திடீரென அரசியல் கட்சியை ஆரம்பித்து, மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் கமல். பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், கமல் தொடர்ந்து சினிமா, அரசியலில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அதனால், இந்தமுறை தேர்தலில் சென்னை, மதுரை, திருச்சி என வேறு தொகுதிகளில் கமல் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் கோவையில் தான் போட்டியிடுவேன் என அதிரடியாக தெரிவித்திருக்கிறார் கமல்.
சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில், வாழ்க்கையில் பணம் எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து, நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,
மூச்சு இல்லாமல், 40 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை தாக்கு பிடிக்க முடியும். தண்ணீர் இல்லாமல், ஆறு, ஏழு நாட்கள் இருந்து விடலாம். சாப்பிடாமல், பத்து நாட்கள் வரை தாக்கு பிடிக்க முடியும். இவற்றை எல்லாம் விட பணம் முக்கியமானதாக எனக்கு தெரியவில்லை. என்னுடைய அனுபவத்தில், 15 – 16 வயதில், என்னிடம் பணம் இல்லவே இல்லை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை, அட்ஜஸ்ட் செய்து, கையில் பணம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன்.
பணம் என்பது பிளேடு மாதிரியான ஒரு கருவி. குறிப்பாக ஆண்களுக்கு சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் தாடியை மழிக்க வேண்டுமா, மீசையை வைக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், பிளேடுவிடம் போய் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது ஒரு கருவி. தாடியை நீளமாக வளர்க்க வேண்டுமா, மீசை வைக்க வேண்டுமா என கருவியிடம் சென்று கேட்கக் கூடாது. ஏனென்றால், பணம் என்பது ஒரு பேசாத மடந்தை என்று பளிச் என பணம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் கமல்





