தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் துணை நடிகராக இருந்து பிறகு கதாநாயகனாக மாறி ஒரு கட்டத்தில் வில்லனாகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிறந்த நடிகை தேசிய விருது பெற்ற நித்யாமேனன் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லன் கேரக்டரில் மிஷ்கின் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விடுதலை 2 மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ட்ரெயின் ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.
இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கமல்ஹாசன் 7 ஆண்டுகளாக நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போது நடிகர் விஜய் சேதுபதி 8வது ஆண்டில் நடத்தி வருகிறார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதியை ஒப்பிடுகையில், கமலை விட சிறப்பாக தொகுப்பாளர் பணியை அவர் செய்வதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். கமலிடம் இருந்த நாடகத்தனமான பேச்சும், செயற்கையான நடவடிக்கையும் இல்லாமல் விஜய் சேதுபதி மிகவும் யதார்த்தமாக பேசுகிறார் என்று கூறுகின்றனர்.
அதே வேளையில் கமல்ஹாசன் போல் நிறைய அனுபவம் சார்ந்த விஷயங்களை விஜய் சேதுபதி பேசுவதில்லை. குறிப்பாக நாட்டு நடப்பு விஷயங்களை விஜய் சேதுபதி பேச மறுக்கிறார். மறைந்த தலைவர்கள், புத்தகப் பரிந்துரை போன்ற விஷயங்களை சொல்வதில் விஜய் சேதுபதிக்கு ஆர்வமில்லை என்ற ஒரு கருத்தும் வருகிறது. ஒரு தரப்பு கமல்ஹாசனை மறுத்து விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டாலும், ஒரு தரப்பு கமல்ஹாசன் அளவுக்கு விஜய் சேதுபதி தொகுப்பாளர் பணியில் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது நிகழ்ச்சி தொகுப்பாளராக கமல்ஹாசன் இருந்தபோது அந்த நிகழ்ச்சியை நடத்தும் முக்கிய விளம்பரதாரர்கள் மற்றும் துணை விளம்பரதாரர்கள் பெயர்களை உச்சரித்து விட்டு தான் நிகழ்ச்சியை துவங்குவார். இடையிடையே அந்த பெயர்களை சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரை முக்கிய விளம்பரதாரர்கள் பெயர்களை மட்டுமே சொல்லிவிட்டு துணை விளம்பரதாரர்கள் நிறுவனங்கள் பெயரை சொல்ல மறுக்கிறார்.
இதுகுறித்து பிக்பாஸ் நிர்வாகிகள் கேட்டால், அத்தனை நிறுவனங்கள் பெயரை மனப்பாடம் செய்து என்னால் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். துணை விளம்பரதார்களில் ஆன்லைன் ரம்மி விளம்பரமும் இருப்பதால்தான் விஜய் சேதுபதி அந்த பெயர்களை படிக்க மறுக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி என்றால் சமூக பொறுப்புள்ள ஒரு மனிதராக விஜய் சேதுபதியை பாராட்டலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எனினும் ஒரு நிகழ்ச்சியை வழங்கும் விளம்பரதாரர்கள் பெயரை ஒரு தொகுப்பாளராக அவர் சொல்ல மறுப்பதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.





