ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதற்கு முன்பு அவர் நடித்த கோச்சடையான் தர்பார் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்திருப்பதே இதற்கு காரணம்.
இந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கும் சூப்பர் ஸ்டார், அதற்காக இளம் இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை கேட்டு வருகிறார். இதன் நடுவே லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன், அவர் இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமானார். இதில் ஒரு படம், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலின் படைப்பில் உருவாகிறது.
இந்த திரைப்படத்தில் ரஜினியுடன், அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட பிரபலம் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் நடித்ததால் பிற மாநிலங்களில் வசூல் அதிகப்படியாக இருந்தது.
இந்த ஃபார்முலாவை தான் தற்போது ஜெய் பீம் இயக்குனரின் படத்திலும் ரஜினி கடைபிடிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தி மலையாளம் தெலுங்கு திரையுலகில் இருந்து நடிகர் நடிகைகள் இதில் இறக்கப்பட்டுள்ளார்களாம். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே லைக்கா நிறுவனத்துடன், ரஜினிகாந்த் ஒப்பந்தமாக இருக்கும் மற்றொரு திரைப்படம் லால் சலாம். இந்தத் திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனது கணவர் தனுஷை வைத்து 3 மற்றும் வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை எடுத்திருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மூன்றாவது முறையாக படம் இயக்க வந்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து அதன் மூலம் வெளிப்படும் மதக் கலவரத்தை இந்த படம் பேசியிருக்கிறது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், கே எஸ் ரவிக்குமார் என ஏராளமானோர் நடித்துள்ளனர். இதில் இஸ்லாமியராக ரஜினிகாந்த் நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இதன் டீசர் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. முக்கியமாக டீசரில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள் சிந்திக்க வைப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





