இயக்குனர் ஷங்கர் டைரக்சனில் லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மொத்தம் 750 திரைகளில் இந்த படம் நாளை முதல் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. தமிழகத்தில் நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சி நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் இந்தியன் 2 படம் 5000 திரைகளில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது லியோ படத்தைக் காட்டிலும் இந்தியன் 2 படம், 1000 திரைகள் அதிகமாக திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனுடன் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கமல் தொழிலில் மிகவும் நேர்த்தியாக இருப்பவர். படத்தில் வரும் எந்த காட்சியாக இருந்தாலும் சில நொடிகளே என்றாலும் அதற்காக தன்னை சிரமப்படுத்திக் கொள்வது, அதிகளவில் மெனக்கெடுவது கமலுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஒரு கேரக்டரை, ஒரு காட்சியை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் கமல் உறுதி மிக்கவர். அதற்காக உடல் ரீதியாக மனரீதியாக எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும் அதற்காக தன்னை வருத்திக் கொள்ள அவர் தயங்கவே மாட்டார்.
இந்தியன் 2 படத்தில் ஒரு காட்சியில் கமல், சற்று நீளமான அதிக நிமிடங்கள் குஜராத்தி மொழியில் பேச வேண்டிய காட்சி இருந்தது. இந்த காட்சியில் நடிக்க கமல், குஜராத்தி மொழி பேச வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. அந்த காட்சி படமாக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவில், உஜராத்தி மொழி தெரிந்தவரை அழைத்து வந்து, கமல் பேச வேண்டிய வசனங்களை அவரிடம் குஜராத்தி மொழியில் கற்றுக்கொண்டு அடுத்த நாள் ஷூட்டிங்கில், குஜராத்தி மொழியில் மிக நீளமான வசனங்களைஒரே டேக்கில் பேசி முடித்து படக் குழுவினரை அசத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பிற மொழிகளில் இந்தியன் 2 வெளியாகும் நிலையில், மற்ற மொழி படங்களில் இந்தியன் 2 படத்தில் கமல் பேசிய அந்த குஜராத்தி மொழி பேசிய வசனக்காட்சி இடம் பெறுகிறது. ஆனால் தமிழில் வெளியாகும் இந்தியன் 2 படத்தில் மட்டும், அந்த காட்சியில் குஜராத்தி மொழியில் கமல் பேசினாலும், அதற்கு பின்னணியில் தமிழில் அந்த வசனங்கள் ஒலிப்பது போல் இயக்குனர் ஷங்கர் மாற்றம் செய்துள்ளார்.
ஏனெனில் தமிழ் ரசிகர்களுக்கு குஜராத்தி மொழியில் பேசுவது புரியாது என்பதால், அது தமிழிலேயே அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான ஒரு மாற்றத்தை தமிழ் ரசிகர்களுக்காக ஷங்கர் செய்திருக்கிறார். இது கமலுக்கு ஏமாற்றம் அளித்தாலும் ரசிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கு, கமல் குஜராத்தி மொழியில் பேசும் விஷயங்கள் தமிழில் சென்று சேர வேண்டும் என்று டைரக்டர் ஷங்கர் கருதுவதால், அவரது இந்த செயலலை ரசிகர்கள் பாராட்டவே செய்கின்றனர்.





