சமீபத்தில் மிஸ் யூ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பாலசரவணன், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் 29ம் தேதி படம் ரிலீஸாகிறது.
மிஸ் யூ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பாடல்களை வெளியிட்ட நடிகர் கார்த்தி பேசியதாவது, நான் படித்துவிட்டு உதவி இயக்குனராக சேர்ந்த அந்த சமயத்தில்தான் சித்தார்த் சுதா கொங்கரா, மிலிந்த் எல்லோரும் அங்கே இருந்தார்கள்.
சினிமா பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்த விஷயங்கள், அவர்கள் பேசும் விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது அய்யய்யோ திரும்பவும் நாம் கடைசி பெஞ்ச் தான் போல இருக்கிறதே, இவர்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்களே, நாம் எதுவும் தெரியாமல் ஏமாந்து விட்டோமே என்று நான் வருத்தப்பட்டேன்.
சினிமா எடுக்க வேண்டும் என்றால் சினிமா பார்த்தால் மட்டும் பத்தாது. நிறைய படிக்க வேண்டும், நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என இவர்களுடன் பேசிய போதுதான் நான் கத்துக்கிட்டேன். இந்த படத்தின் டைட்டில் மிஸ் யூ. பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள்தான் லவ் யூ. சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட் எல்லாம் லவ் போஸ்ட்களாக இருக்கின்றன. ஆனால் நாம் ஆக்சன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல் அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக தான் இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் அது போன்ற படங்களை எடுப்பதில்லை.
காதல் படங்கள் குறைந்து விட்டது, வருத்தமாக இருக்கிறது. அதிகமான காதல் படங்கள் வரவேண்டும் என்று கார்த்தி பேசியிருக்கிறார். காதல் கலந்த ஆக்சன் படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான அமரன் படம் கூட அந்த ரகத்தை சேர்ந்ததுதான். அதனால் அமரன் படத்தையும் நடிகர் கார்த்தி குறிப்பிட்டு சொல்லி இருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





