சமீப காலமாக, தமிழ் சினிமாவில் பெரிய அளவிலான ஹிட் படங்கள் ரிலீசாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வருகின்றன. அந்த வகையில் ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 20 வரை ஏறக்குறைய மூன்றரை மாதங்கள் கழிந்தும், இன்னும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் எதுவும் வரவில்லை. இது ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது.
குறிப்பாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் போன்ற படங்களும் பலத்த ஏமாற்றங்களை தந்தன. இந்த படங்கள் வசூலில் ஓரளவு திருப்தி அளித்தாலும், ரசிகர்களின் விமர்சன ரீதியாக இந்த படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில் இந்த ஆண்டில் வெளியான மலையாள படங்களான மஞ்சும்மெல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரேமலு, ஆடுஜீவிதம் ஆகிய நான்கு படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. அதிலும் குறிப்பாக பிரேமலு, மஞ்சம்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம் போன்ற படங்கள் 100 கோடியை தாண்டிய வெற்றி படங்களாக அமைந்து விட்டன.
அதிலும் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படம் தவிர, மூன்று படங்களுமே நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டிய வெற்றி படங்களாக அமைந்தன. இப்படி மலையாளப்படங்கள் வெற்றி பெறும் நிலையில், தமிழ் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை, ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
ஆனால் இந்த மனக்குறை தீரும் வகையில், தற்போது நடிகர் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சித்தா போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் டைரக்ட் செய்து வருகிறார். அதனால் வீர தீர சூரன் படம் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று கூறப்படுகிறது.
அடுத்து அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள படம் மனுஷி. ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் தமிழில் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. எனவே வீர தீர சூரன் படம் விக்ரம் நடிப்பிலும், மனுஷி படம் ஆண்ட்ரியா நடிப்பிலும் தமிழ் சினிமாவில் நடப்பாண்டில் மிக முக்கிய படங்களாக, மலையாள படங்கள் வெற்றியை கடந்து தமிழ் சினிமாவின் பெயர் சொல்லும் மெகா ஹிட் படங்களாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.





