தமிழ் சினிமாவில் சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விடுவதுண்டு. ஒரு திரைப்படம் உருவாகி ரிலீஸாவதில் பலகட்டங்களில் இடையூறுகள் சிக்கல்கள் இருக்கின்றன. அதை எல்லாம் கடந்து ஒரு படம் திரைக்கு வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அப்படி போராடி திரைக்கு வந்து சில நாட்களில் அந்த படங்கள் ஜெயிக்காமல் காணாமலும் போய்விடுகின்றன.
ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்த படம் கிழக்கு வாசல். இந்த படத்தில் ரேவதி குஷ்பு மனோரமா சண்முகசுந்தரம் விஜயகுமார் ஜனகராஜ் தியாகு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு கதை திரைக்கதை எழுதியவர் மது. இவர் தன் பெயரை போலவே மதுவுக்கு அடிமையாக இருந்தார்.
இந்நிலையில் மது இயக்கிய படம்தான் தெய்வவாக்கு. அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது நடந்த சம்பவம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, தெய்வவாக்கு படத்தை மது டைரக்ட் செய்தார். ஆனால் எப்போதும் படப்பிடிப்பு தளத்திலும் மதுபாட்டிலுடன்தான் அவர் காணப்பட்டார். அதனால் படப்பிடிப்பில் சிக்கலானது.
இந்த படத்தின் கதை கதாநாயகன் கார்த்திக்கு பிடிக்கவில்லை. அதில் சில மாற்றங்களை கொண்டு வர நினைத்தார். அதற்கும் இயக்குனர் மது ஒத்துழைக்கவில்லை. இதற்கிடையே பாரதிராஜாவிடம் இருந்து நடிகர் கார்த்திக்குக்கு அழைப்பு வந்தது. அதனால் நாடோடித் தென்றல் படப்பிடிப்பில் பங்கேற்ற கார்த்திக், அந்த படம் முடிந்த பிறகு 6 மாதங்கள் கழித்து தான் தெய்வவாக்கு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.
இந்த சூழலில் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் போதையில் இருந்த டைரக்டர் மதுவால் படத்தை டைரக்ட் செய்ய முடியவில்லை. இதையடுத்து, தெய்வவாக்கு படத்தை இயக்கும் பொறுப்பை நடிகர் கார்த்திக்கே ஏற்றுக் கொண்டார். உதவி இயக்குனர்களை அழைத்து பேசினார் கார்த்திக்.
படத்தில் இன்னும் என்னென்ன காட்சிகள் எடுக்க வேண்டும், யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று கேட்டு விசாரித்து, உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து 28 நாட்களில் தெய்வவாக்கு படத்தின் மீதி ஷூட்டிங்கை நடிகர் கார்த்திக்கே இயக்குனராக இருந்து முடித்து கொடுத்தார் என்று அந்த நேர்காணலில் தயாரிப்பாளர் டி சிவா கூறியிருக்கிறார்.





