இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தியவர். அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே காதலும், காமெடியும் கலந்த ஒரு தரமான படத்தை இயக்கி, ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
அடுத்து அவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி, காலா படங்கள் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இந்திய சினிமா அளவில் பெரிய கவனத்தை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் பா ரஞ்சித் இயக்கத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த வெற்றிப் படமாக இருந்தது. பா ரஞ்சித் படங்களை பொருத்தவரை ஜாதிய உரிமைகள், சமூக ஏற்ற தாழ்வுகள் குறித்து பேசுவதால், எதிர்மறை விமர்சனங்களும் அதிகளவில் வருகின்றன.
இப்போது சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படம் கடந்த 15 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படம், ஆங்கிலேயர் காலத்தில் தங்கவயல் சுரங்கத்தில் பணிசெய்த அடிமைகள் குறித்து பேசுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது, நான் ஒரு இந்தி படத்தை இயக்கப் போகிறேன். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறேன். பிர்சா முண்டா என அந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நானும் என் நண்பரும் இணைந்து இந்த படத்துக்கான ஸ்கிரிப்டை எழுதியுள்ளேன். கிட்டத்தட்ட அந்த ஸ்கிரிப் உறுதியாகி விட்டது. இப்போது நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பா ரஞ்சித் கூறியிருக்கிறார். இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் இந்தியில் வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகிறது.





