நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர். நந்தா படத்தில் அவர் ஏற்று நடித்த லொடுக்கு பாண்டி கேரக்டர் இன்று வரை அவரது அடையாளமாக இருந்து வருகிறது. ஏனெனில் அந்த படத்தில் லொடுக்கு பாண்டியாக கருணாஸ் வேற லெவலில் தன் நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து வில்லன், பாபா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், திருடா திருடி, யாரடி நீ மோகினி, பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் நடிகர் கருணாஸ், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக ஆதரவு எம்எல்ஏவாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் நடிகர் கருணாஸ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது மகன் கென் கருணாஸ் நெடுஞ்சாலை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில், கூவத்தூர் நட்சத்திர விடுதிக்கு பிரபல நடிகை ஒருவரை கருணாஸ் அழைத்துச் சென்றதாக அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது சமூக வலைதளங்களில் பயங்கரமான பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபர் மீது கருணாஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக நடிகர் கருணாஸ், சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு போலீசார் சோதனை அவர் வைத்திருந்த பேக்கில், 40 துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவரை தனியாக அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, நான் முறைப்படி லைசென்ஸ் பெற்று, பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்கிறேன். அதன் குண்டுகள்தான் இவை. விமான நிலையத்துக்கு அவசரமாக கிளம்பி வந்ததால், பேக்கில் இருந்ததை கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். எனினும், விமானத்தில் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது பெரிய குற்றம் என்ற நிலையில், அவரை விமான பயணத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு, 30 நிமிடம் தாமதமாக அவர் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டுச் சென்றது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





