இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் கிஷோர். தொடர்ந்து ஆடுகளம் ஜெயிலர் வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். சந்தன கடத்தல் வீரப்பன் கேரக்டரில் அவர் நடித்த வனயுத்தம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கிஷோர் கூறியதாவது, 40 வருஷத்துக்கு முன்னாடி ஒரு குவிண்டால் ரைஸ், நூறு கிலோ அரிசி விலை 50 ரூபாயாக இருந்தது. அப்போது ஒரு ஆசிரியரோட சம்பளம் 30 ரூபாயாக, 40 ரூபாயாக இருந்தது. இப்போது ஆசிரியரோட சம்பளம் 40 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. ஆனால் விவசாயி உற்பத்தி செய்யும் ஒரு குவிண்டால் அரிசி 2 ஆயிரம் ரூபாய் தான்.
50 ஆயிரம் ரூபாய் இருக்குது எங்கே? 2 ஆயிரம் ரூபாய் எங்கே இருக்குது? ஏன் விவசாயிக்கு இவ்வளவு கம்மியா கொடுக்கிறாங்க? ஆசிரியருக்கு மட்டும் சம்பளம் அதிகமா என்று கேட்டால், அவன் படிச்சவன் திறமை அதிகம். பங்களிப்பு அதிகம். அதனால் சம்பளம் அதிகம். ஆனால் விவசாயிக்கு அவ்வளவு பங்களிப்பு இல்லை. மண்ணுதானே வளர்த்ததுன்னு சொல்றாங்க.
ஆனால் நமக்கு எது தேவை என்று பார்த்தால், ஆசிரியர் தாண்டி விவசாயி தான் முக்கியம். தெய்வீகமான வேலை செய்யறாங்க. ஏன் இந்த பாரபட்சம்? விவசாயியை ஏழையாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம். காந்திஜி அப்பவே சொன்னார். வெள்ளைக்காரன் பண்றது தான் நாம பண்ணிக்கிட்டு இருக்கோம்.
கிராமத்துக்கு போய் மெக்காலே கல்வி முறை கொடுத்தால் அவன் படிச்சதுக்கு அப்புறம் யோசிப்பான். நான் படித்த படிப்புக்கு இங்கே வேலை இல்லே. நகரத்துக்கு போகணும்ன்னு நினைப்பான். வெள்ளைக்காரன் கல்வி கொடுத்ததே அதுக்குத்தான். ஏன்னா அவங்களுக்கு கிளர்க் வேலை செய்ய ஆள் தேவைப்பட்டது.
நீங்க ஏன் விவசாயிகளை கொண்டு போய் கிளர்க் வேலை பண்ணிட்டு இருக்கீங்கன்னு அப்பவே காந்தி போராடினார். ஆனால் நமக்கு டெக்னாலஜி வேணும். கல்வி வேணும்ன்னு கிராமத்திலிருந்து வெளியே வந்துட்டோம் என்று நடிகர் கிஷோர் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவர் சொந்தமாக தனது பண்ணையில் விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





