தமிழ் சினிமாவில் எப்படியாவது இயக்குனராக வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கியவர் தான் மணிகண்டன். ஆரம்பத்தில் யூடியூபில் வெளியான குறும்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் அவரை பார்க்க முடிந்தது. பிறகு அங்கிருந்து தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு காதலும் கடந்து போகும் திரைப்படம் மிக முக்கியமான படமாக அமைந்தது.
அதில் முரளி எனும் இளைஞர் கதாபாத்திரத்தில், சில காட்சிகளில் வந்து போவார் மணிகண்டன். பிறகு விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா திரைப்படத்திலும் அவருக்கு கவனிக்கத்தக்க கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதன் வசனங்கள் தான்.
இதை எழுதியதும் மணிகண்டன் தான். மிகக் கூர்மையான வசனங்களை கொடுத்து அவர் பாராட்டை அள்ளினார். இப்படி, துணை கதாபாத்திரங்களில் பலருக்கும் விருப்பமான நடிகராக மணிகண்டன் மாற, அங்கிருந்து குட் நைட் திரைப்படத்தின் மூலம் நடிகராக ஒரு அசுரத்தனமான பாய்ச்சலில் ஈடுபட்டார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவுக்கு அது வித்தியாசமான கதைக்களம் என்பதால் படத்தை பலரும் வரவேற்றார்கள். பிறகு லவ்வர் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. தற்போது குடும்பஸ்தன் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கிறார் மணிகண்டன்.
இன்றைய நவீன யுகத்தில் மிடில் கிளாஸை சேர்ந்த ஒரு இளைஞன் திருமணம் செய்யும்போது அவன் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் என்னென்ன என்பதை நகைச்சுவையாகவும் எமோஷன் கலந்தும் இந்த திரைப்படம் கொடுத்திருப்பதால் குடும்பஸ்தன் திரைப்படத்திற்கு பலரும் பச்சைக்கொடி காட்டி வருகிறார்கள். மேலும் மணிகண்டன் தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி என்றும் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.
இந்த சூழலில் திடீரென அவர் இயக்கத்தின் பக்கம் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இயக்கத்தின் மீதே அவர் ஆசை கொண்டிருந்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வேறு யாருமல்ல அவருக்கு மிகவும் நெருக்கமான விஜய் சேதுபதியை வைத்துதான் படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விஜய் சேதுபதியிடம் மணிகண்டன் கதை கூறிவிட்டதாகவும், அதற்கு நடிகரும் ஓகே சொல்லிவிட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





