இந்திய சினிமாவில் இருக்கும் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் தனது நுணுக்கமான திரைக்கதை மூலம் பலராலும் பாராட்டப்படுபவர் இயக்குனர் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் ஏழு ஆண்டுகளுக்கு மேல் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சுதா கொங்கரா. 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுதா கொங்கரா.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. திரையரங்களில் வந்த தடம் தெரியாமல் படம் வெளியே போனதால், சுதா கொங்கராவுக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய அடியை கொடுத்தது.
இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட அவர், தனது இரண்டாவது படத்திற்கு ஐந்து வருடங்கள் இடைவெளியை எடுத்துக் கொண்டார். இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியில் இருந்த அவர், தனது ஸ்கிரிப்ட்டை மெல்ல மெல்ல செதுக்க உருவானது, இறுதிச்சுற்று திரைப்படம். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில், மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

குடிசைப் பகுதியில் வாழும் இளம் பெண்ணுக்கு குத்துச்சண்டை விளையாட்டில் வெற்றி பெறுவது தான் படத்தின் கதை கரு. திமிர் பிடித்த இளம் பெண் வேடத்தில் ரித்விகா சிங் நடிக்க, குத்து சண்டை பயிற்சியாளராக மாதவன் கலக்கி இருந்தார். எங்குமே சோர்வை ஏற்படுத்தாத திரைக்கதை, அட்டகாசமான ஒளிப்பதிவு, துள்ளலான இசை, விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இறுதிச்சுற்று.
இதன் பிறகு சுதா கொங்கரா, சூர்யாவை வைத்து சூரரைப் போற்று திரைப்படத்தை எடுத்தார். குறைந்த விலையில் பயணிகளை விமானத்தில் பறக்க செய்த கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சூர்யாவுக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்த, படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதை பெற, நடிகர் சூர்யாவும் சிறந்த கதாநாயகன் விருதைப் பெற்றார். இதையடுத்து, சுதா கொங்கரா யாரை வைத்து இயக்கப் போகிறார் என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சூர்யா மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மானை வைத்து அவர் படம் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் கார்த்தியை நடிக்க வைக்க இருந்ததாகவும், ஆனால் கால்சீட் பிரச்சினை காரணமாக தற்போது இதில் துல்கர் இணைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவின் 43 வது திரைப்படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு, டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





