தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு தனது பொன்விழாவை கொண்டாடுகிறார். அதாவது அவர் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் அவர் நடித்து முடித்து இருக்கிறார். அவர் கடைசியாக நடித்து அக்டோபர் 10ம் தேதி வெளிவர உள்ள படம் வேட்டையன். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது 171-வது படமாக கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
நடிகர் ரஜினிக்கும் நடிகர் விஜய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. அதாவது அதிக வசூலை தரும் படங்களில் நடிக்கும் ஹீரோதான் சூப்பர் ஸ்டார். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாகவே 300 கோடி 500 கோடி 600 கோடி என வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் விஜய் தான் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ஒரு சர்ச்சை கிளம்பியது.
இதற்கு பதிலடி தரும் விதமாக ரஜினிகாந்த் காக்கா கழுகு கதை சொன்னது மேலும் பிரச்சனையை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் என்று இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதேபோல் லால் சலாம் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், விஜய் எனக்கு போட்டியாளர் அல்ல. இப்படி நானோ, விஜயோ நினைப்பதே தவறான விஷயம் என்றும் பேசி அவரும் இந்த விவகாரத்தை முடித்து வைத்தார். எனினும் இப்போது மீண்டும் அந்த சர்ச்சையை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்துக்கு அவர் வாங்கியுள்ள சம்பளம் 200 கோடி ரூபாய். அடுத்ததாக அவர் நடிக்கும் எச் வினோத் இயக்கும் படத்துக்கு விஜய் வாங்குகிற சம்பளம் 275 கோடி ரூபாய், ஜிஎஸ்டி வரியினங்கள் உட்பட 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் பேசி உள்ளது. வசூலில் குறிப்பிட்ட பங்கு கிடைக்கும் என்றாலும் விஜயை நெருங்கவும் ரஜினிக்கு வாய்ப்பு இல்லை. இப்போதும் வசூலில் முன்னிலையில் இருக்கும் விஜய்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வைரலாகி வருகிறது.





