நடப்பாண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக அளவு வசூல் செய்த திரைப்படங்கள் மூன்றே மூன்று தான். பொங்கல் பண்டிகைக்கு வெளியான மதகஜராஜா, அடுத்து ரிலீஸ் செய்யப்பட்ட குடும்பஸ்தன், பிறகு பிரதீப் ரங்கநாதனின் டிராகன். இந்த மூன்று படங்கள் மட்டும் தான் 2025 ஆம் ஆண்டில் தற்போதைக்கு அதிக வசூல் குவித்த திரைப்படங்களாக இருக்கின்றன.
இந்தப் பட்டியலில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தையும் கூறலாம். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம், பெரிய அளவு பேசப்படவில்லை என்றாலும் வசூலில் நல்ல கல்லா கட்டியது. இதே போல் மணிகண்டனின் குடும்பஸ்தன் திரைப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.
ஆரம்பத்தில் குறும்படங்களிலும் youtube இல் வெளியான சின்ன சின்ன படங்களிலும் வந்து போனவர் தான் இந்த மணிகண்டன். இதன்பிறகு கிடைத்த வாய்ப்பு எல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டு முன்னேறிய அவர், முக்கிய ஹீரோக்கள் நடித்த திரைப்படங்களில், வலுவான கதாபாத்திரத்தை வாங்கிக் கொண்டு தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதில் முக்கியமாக காலா திரைப்படத்தையும், ஜெய் பீம் படத்தையும் கூறலாம். இந்த இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றதோடு கவனத்தையும் ஈர்த்தது. இதன்பிறகு ஹீரோவாக அறிமுகமான அவர், தனது முதல் திரைப்படம் ஆன குட் நைட்டிலேயே சிக்ஸர் விளாசினார். குறட்டை என்னும் ஒன்லைனை கான்செப்ட் ஆக கொண்டு, திரைக்கதையை சுவாரசியமாக எடுத்த இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2கே கிட்ஸ்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, லவ்வர் திரைப்படம் மணிகண்டனுக்கு வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக குடும்பஸ்தன் திரைப்படங்களில் நடித்து பலரது கவனத்தையும் அவர் ஈர்த்தார். இதுவும் வசூலில் கல்லாகட்ட, வெள்ளித்திரையில் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த நடிகர்களில் ஒருவராக மாறினார் மணிகண்டன்.
இந்த நிலையில் தற்போது அவர், அடுத்ததாக இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவியாளர் சந்தோஷ் குமாருடன் கை கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு மக்கள் காவலன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைப்பை பார்க்கும் போதே இது சமூகப் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என்று தெரிகிறது. தொடர்ந்து மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ள மணிகண்டன் இதன் மூலம் நான்காவது வெற்றியை தனதாக்கி கொள்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





