இந்த ஆண்டில் மட்டும் அரசியல், கட்சி மாநாடு என பல திருப்பங்களை கொடுத்து அசர வைத்திருக்கிறார் நடிகர் விஜய். அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பலரும் யூகித்துக் கூறியிருந்தாலும் அதனை இத்தனை சீக்கிரமாக செயல்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதற்கான முன்னெடுப்பிற்காக பல ஆண்டுகள் திட்டம் தீட்டிய நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார். தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்தார் விஜய்.
அது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். அதில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே தனது இலக்கு என்றும், தான் ஒப்புக் கொண்டிருக்கும் திரைப்படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறி இருந்தார். இதற்கான முன்னெடுப்பையும் அவர் படிப்படியாக செய்து வந்தார்.
இதில் உச்சபட்சமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் கட்சி மாநாட்டை விஜய் நடத்தினார். இந்த மாநாட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பேசினார் விஜய். அதில் முதலில் திராவிடமும் தமிழ் தேசியமும் தான் தங்களது கொள்கை என்று அவர் விவரித்தார்.
மிக முக்கியமாக கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் ஒரு அணுகுண்டை தூக்கி போட்டார். இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் திமுக மற்றும் பாஜகவை அவர் கடுமையாக சாடினார். விஜய்யின் இந்த பேச்சு இணையதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அதற்கான எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
ஒன்று சாலையில் இந்த ஓரம் நில்லுங்கள் அல்லது அந்த ஓரம் நில்லுங்கள் நடுவில் நின்றால் இறந்து விடுவீர்கள் என்று அவர் கடுமையாக பேசியிருந்தார். இப்படியான சூழலில் அரசியலில் புதிய பாய்ச்சலாக, செய்தி சேனலை விஜய் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 24 மணி நேரம் செய்தி சேனலாக இது இருக்கும் என்றும், இதற்கு தமிழ் ஒளி என பெயர் வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் இது குறித்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.





