சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு கல்ட் திரைப்படம்தான் சுப்பிரமணியபுரம். அந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் நாம் விவரித்து கொண்டே போகலாம்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்பார்ப்பு சசிக்குமார் மேல் எழுந்தது. அது தொடரும் விதமாகவே அவருக்கு நாடோடிகள் திரைப்படம் அமைந்தது. பிறகு மீண்டும் தனது இயக்கத்தில் ஈசன் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார் சசிகுமார். ஆனால் இது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனை தொடர்ந்து நடிப்பில் மட்டுமே சசிகுமார் கவனம் செலுத்தி வந்தார். அதில் சுந்தரபாண்டியன் திரைப்படம் அவருக்கு சரியாக கிளிக் ஆனது. எஸ் ஆர் பிரபாகர் இயக்கி இருந்த அந்த திரைப்படம் வெற்றி மேல் வெற்றி குவித்தது. ஆனால் இதன் பிறகு அவரது திரையுலக பயணம் அந்த அளவுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை.
ஹீரோவாக சசிகுமார் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன. சசிகுமார் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் இங்கு பலருக்கு தெரியாமல் போன கதை கூட உண்டு. இப்படியான சூழலில், அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது அயோத்தி திரைப்படம்.
இங்கிருந்து சசிக்குமார் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துவிட்டார் என்றே கூறலாம். தொடர்ந்து எதார்த்தமான கதைக்களத்தை தேடிக் கொண்டிருக்கும் அவர் தற்போது, டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இலங்கையில் இருந்து வரும் குடும்பம் எதிர்கொள்ளும் சவாலை தான் இந்த திரைப்படம் விவரிக்கிறது.
இந்த திரைப்படம் தொடர்பான விழாவில் நடிகர் மணிகண்டன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பலரும் இந்த திரைப்படம் நன்றாக இருப்பதாக இரண்டு வாரங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தை பார்த்து விட்டேன். இதன் இயக்குனர் அபிஷன், எனக்கு கதையை கூறிவிட்டார். அவர் சொன்னதே எனக்கு படம் பார்த்து அனுபவத்தை கொடுத்தது. இதில் சசிகுமார் கதாநாயகனாக இடம் பெற்றிருப்பது மிகச்சரியான தேர்வு என்று தெரிவித்தார்.





