தமிழ் சினிமாவில், கடந்த 1980 -90களில் ரஜினி, கமலை போலவே முன்னணியில் இருந்த நடிகர் மோகன். இவர் நடித்த படங்கள் என்றாலே, அது வெள்ளி விழா படங்களாக தான் இருக்கும். குறிப்பாக மெல்ல திறந்தது கதவு, விதி, மௌன ராகம், 24 மணி நேரம், உதய கீதம், பயணங்கள் முடிவதில்லை, தென்றலே என்னைத் தொடு, இதயக்கோவில், உயிரே உனக்காக, குங்குமச் சிமிழ், உருவம், நான் பாடும் பாடல் என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.
மோகன் படங்கள் என்றாலே, மிகச் சிறந்த பாடல்கள் நிறைந்த படமாக அது கட்டாயம் இருக்கும். பெரும்பாலும் மோகன் நடித்த படங்களில், நன்றாக பாடுபவர் என்ற கேரக்டரில்தான் மோகன் நடிப்பார். மைக் பிடித்தபடி பல படங்களில் பாடிக்கொண்டே இருப்பார். அதனாலேயே அவருக்கு மைக் மோகன் என்ற பட்டப் பெயர் கிடைத்தது. இயல்பிலேயே நல்ல அழகும், வசீகரத் தோற்றமும் கொண்ட மோகனின் வெற்றிக்கு மற்றொரு காரணம், பாடகர் எஸ்என் சுரேந்தர். காரணம், மோகனின் குரலாக திரைக்கு பின்னால் ஒலித்தது எஸ் என் சுரேந்தர் குரல்தான்.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்த மோகன், நாளடைவில் படங்களில் நடிப்பது குறைந்து போனது. எஸ்வி சேகருடன் சகாதேவன், மகாதேவன் போன்ற சில படங்களில் நடித்த அவர், பின் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லிக்கொள்ளும்படியாக எந்த படத்திலும் மோகன் நடிக்கவில்லை. இடையில் ஓரிரு படங்களில் நடித்தும் பழையபடி மார்க்கெட் உயரவில்லை.
இதற்கிடையில் டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் மோகனை தங்கள் படங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால், படம் முழுக்க வரும் ஹீரோ கேரக்டர் என்றால் நடிக்கிறேன். மற்ற ஹீரோக்களின் படத்தில் ஏதோ ஒரு கேரக்டரில் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, இன்னும் பழைய தோற்றத்திலேயே தனது உடல் அமைப்பை, அழகை பராமரித்து வரும் மோகன், ஹீரோவாகவே நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்து வந்தார்.
இந்நிலையில், இப்போது வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படத்தில் மோகன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் வில்லன் கேரக்டரில்தான் நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் அரவிந்த் சாமி நடிப்பதாக இருந்த நிலையில், அவருக்கு பதிலாக மைக் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தில் மோகன் சம்பளம் ரூ. 2 கோடி எனக் கூறப்படுகிறது.
மோகன் ஹீரோவாக இருந்த காலகட்டத்தில் அதே வரிசையில் இருந்த சத்யராஜ், அர்ஜூன், கார்த்திக் போன்றவர்கள் அவ்வப்போது வில்லன் கேரக்டர்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தங்களை தக்க வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்றைக்கும் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகின்றனர். தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றும் பாராட்டப்படுகின்றனர். அந்த நிலையில், விஜய் படத்தில் வில்லனாக ரீ என்ட்ரி கொடுப்பது, தனக்கு மிகப்பெரிய வரவேற்பாக இந்த படம் இருக்க வாய்ப்புள்ளதால், விஜய் 68 படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் மோகன் எனத் தெரிய வந்துள்ளது.





