மலையாள சினிமாவில், பாலியல் துன்புறுத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 2017ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியாகி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 239 பக்கங்கள் கொண்ட இந்த விசாரணை அறிக்கையில் பெண்களுக்கான எதிரான பாலியல் குற்றங்கள் உறுதியாகி விட்டன.
இந்த விவகாரத்தில், மலையாள நடிகர் சங்கம் (அம்மா) கலைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தலைவராக உள்ள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் கமிட்டி உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதும், பெரிய அளவில் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக நடிகர் மோகன்லால் குறித்து தங்கலான் பட நடிகை பார்வதி விமர்சனம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று நடிகர் மோகன்லால் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அம்மா சங்கத்தில் தலைவராக நான் இரண்டுமுறை தலைவராக இருந்துள்ளேன். பாலியல் விவகாரம் குறித்து சங்கம் கலைக்கப்பட்டாலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதன் பணிகளை செய்து வருகிறது.
பேரிடர் காலத்தில் சங்கம் நிறைய உதவிகளை செய்திருக்கிறது. சங்கம் குறித்து அவதூறு பரப்பாதீர்கள். மலையாளத்தில் 21 சங்கங்கள் உள்ளன. நடிகர் சங்கத்தை மட்டுமே குறை சொல்வது சரியல்ல. நான் இங்குதான் இருக்கிறேன். எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்த விஷயத்தில் அரசு தன் கடமையை செய்யும்.
பாலிவுட் சினிமாவை போல, மலையாள சினிமா பிரமாண்டமானது அல்ல. கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறது. இந்த விவகாரத்தால் மலையாள சினிமா பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மலையாள சினிமாவை இந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
பாலியல் துறையில் உள்ள பிரச்னையில் எல்லா துறைகளிலும் மாற்றம் வர வேண்டும். ஹேமா கமிஷன் அறிக்கையில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது. எனினும் நான் அதை வரவேற்கிறேன். பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விசாரணை நடக்கிறது. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என, நடிகர் மோகன்லால் கூறியிருக்கிறார்.





