தமிழ் சினிமாவில் பல அற்புதமான நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் சில படங்களில் நடித்தாலும் அவர்களது இயல்பான, அழுத்தமான நடிப்பு ரசிகர்களின் மனதில் வெகுவாக நின்றுவிடும். அப்படி சிறந்த நடிகர்களை தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் விட்டாலும் ரசிகர்கள் மறப்பதே இல்லை.
அட்டக்கத்தி தினேஷ், எம்எஸ் பாஸ்கர், சண்முக சுந்தரம், டெல்லி கணேஷ், ஜெய் கணேஷ், பூர்ணம் விஸ்வநாதன், அருள்தாஸ், கிஷோர், மௌலி, விகே ராமசாமி, எஸ்எஸ் சந்திரன் போன்ற பலர் மிக அற்புதமான நடிகர்களாக தங்களை வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் நின்றவர்கள்.
நடிகர் எம்எஸ் பாஸ்கர், துவக்கத்தில் சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலில், காது கேட்காதவராக பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். பல படங்களில் நடிகர்களுக்கு பின்னணி குரல் டப்பிங் பேசியவர். பிறகு படங்களில் காமெடி ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
எங்கள் அண்ணா என்ற விஜயகாந்த் படத்தில் ஒரு காட்சியில் பாண்டியராஜன், வடிவேலு சண்டை காட்சியில் ரோட்டில் லுங்கி சட்டையுடன் குடிகாரன் கேரக்டரில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருப்பார். அந்த நடிப்பில் பலரது கவனத்தை ஈர்த்த எம்எஸ் பாஸ்கர் தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
காமெடியாக மட்டுமின்றி வில்லன் கேரக்டரிலும் பார்க்கிங் படத்தில் அசத்தியிருந்தார். மொழி படத்திலும் அவரது நடிப்பு பெரிய பாராட்டை பெற்றது. தசாவதாரம் படத்தில் வித்யாசமாக அவரை கமல் நடிக்க வைத்திருந்தார். சமீபத்தில் ஐயப்ப சுவாமி குறித்து பாடிய இசைவாணிக்கு குட்டு வைத்து பதிவு வெளியிட்டிருந்தார் எம்எஸ் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, நான் ஒரு கஞ்சன் யாருக்கும் காசு கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்க, ஒருத்தர் சுகர் மாத்திரை வாங்கணும்னு காசு கேட்டாரு, கொடுத்தேன். வாங்கிட்டு நேரா ஒயின்ஷாப்புக்கு போறாரு. அப்புறம் நான் எதுக்கு காசு கொடுக்கணும். பசிக்குதா, வாங்க சாப்பாடு வாங்கி தரேன். மாத்திரை வாங்கணுமா, மெடிக்கலுக்கு வாங்க நானே வாங்கி தரேன். ஸ்கூல் பீஸ் கட்டணுமா வாங்க நானே கட்டுகிறேன், அப்படீன்னு சொன்னா கையில கொடுங்கன்னு கேக்குறாங்க. நான் கைல பணம் தர மாட்டேன். இதில் என்ன தவறு இருக்கு. இதுக்காக நாலு பேர் என்ன திட்டினால் திட்டிவிட்டு போகட்டும். எனக்கு ஒன்னும் கவலை இல்லை என்று எம் எஸ் பாஸ்கர் கூறியிருக்கிறார்.





