நடிகர் பார்த்தின் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற ஒரு சிறந்த கலைஞர். இயக்குனராக நடிகராக கதை ஆசிரியராக வசன எழுத்தாளராக தனது திறமையை வெளிப்படுத்தியவர். இயக்குனர் கே பாக்யராஜிடம் சினிமா பாடம் கற்றவர். தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வரும் நடிகர் பார்த்திபன், இளையராஜா மீது அதிக பற்று கொண்டவர். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனது மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜாவை பாராட்டி தள்ளி விடுவார். இளையராஜா இசையை தாண்டி அவரை போற்றி மதிக்கும் பல கலைஞர்களில் பார்த்திபனும் ஒருவராக இருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியதாவது, ஒரு மேடையில் கமலும் இளையராஜாவும் இருந்த போது, நானும் அந்த மேடையில் இருந்தேன். அப்போது இளையராஜா என்னை பார்த்து, உனக்கு மியூசிக் தெரியுமா என்று கேட்டு விட்டார். நானும், எனக்கு உங்களை தெரியும் சார் என்று அப்போது பதில் சொல்லி விட்டேன்.
அதற்கு பிறகு பலர், அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ராஜா சார் எப்படி உங்களை மியூசிக் தெரியுமான்னு கேட்கலாம் என்று பேசினாங்க. அவர் எப்பவுமே அகம்பாவம் புடிச்சவர் என்று எல்லாம் பேசினாங்க. இதற்கிடையே ஒருமுறை இளையராஜாவுடன் தனியா நான் இருக்கும் போது, ஏய்யா நான் அப்படி கேட்டவுடனே உங்களுக்கு என்ன மியூசிக் தெரியும்ன்னு என்னை நீ கேட்டிருக்க வேண்டியது தானய்யா என்று இளையராஜா கேட்டார்.
நான் அசந்து போய், சார் நான் எப்படி அப்படி கேட்பேன் என்றேன். அதற்கு அவர், யோவ் எனக்கே மியூசிக் தெரியாதுய்யா. தெரிஞ்சிருந்தா எப்பவுமே மியூசிக்கை முடிச்சிருப்பேன். ஏன் திரும்ப திரும்ப மியூசிக் பண்ணிட்டே இருக்கேன்? அப்போ கத்துக்கிட்டு இருக்கேன்னு தானே அர்த்தம்? எனக்கு தெரிஞ்சுதுன்னா முடிச்சிருப்பேன் என்று சொன்னார்.
நமக்கு அறிவு வந்துவிட்டால் எதிலும் அடிமையாக இருக்க மாட்டோம். அடிமையா இருக்க விரும்ப மாட்டோம். ஆனால் சில பேர் கிட்ட மட்டும் நாம் அடிமையாகவே இருக்க ஆசைப்படுவோம். அதுல ஒருத்தர்தான் ராஜா சார் என்று அந்த நேர்காணலில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





