தமிழ் சினிமாவில் மிக வித்யாசமான சிந்தனையாளராக இருப்பவர் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன். குறிப்பாக இவர் மேடைகளில் வார்த்தை ஜாலம் காட்டி பேசுவார். தமிழில் இவரது வார்த்தை விளையாட்டு பலரையும் வெகுவாக கவர்ந்து விடும். கிறுக்கல்கள் என்ற தலைப்பில் பார்த்திபன் எழுதிய கவிதை நூலை, பல ஆண்டுகளுக்கு முன் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு கவிதை நூல் வெளியீட்டையே பிரமாண்ட விழாவாக நடத்தி அசத்தியவர் பார்த்திபன் என்று அப்போது கோலிவுட்டில் பலரும் பெருமையாக பேசினர். இயக்குனர் கே பாக்யராஜின் சிஷ்யர்தான் பார்த்திபன். அதனால் குருவை போலவே சிஷ்யனும் கலையில் கில்லாடியாக இன்றும் இருந்து வருகிறார். ஒத்த செருப்பு இரவின் நிழல் போன்ற படைப்புகளால் பார்த்திபன் பேசப்பட்டார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி 2026ம் ஆண்டில் வரப்போகும் சட்டசபை தேர்தலில் நான்தான் ஜெயித்து தமிழக முதல்வர் ஆவேன் என்று சவால் விட்டு பேசி வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தை ஆளும் திமுக ஆகிய அரசியல் கட்சிகளை நேரடியாக எதிர்த்து விமர்சித்தும் வருகிறார்.
நடிகர் விஜய்க்கு இதுவரை தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகரும் ஆதரவு குரல் கொடுக்கவில்லை. அவரது அரசியல் பிரவேசத்தை பாராட்டவில்லை. ஆனால் நடிகர் பார்த்திபன் விஜய் அரசியலுக்கு வந்ததை அவ்வப்போது சுட்டிக்காட்டி பேசி பாராட்டி வருகிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் பார்வை குறித்தும் நிலைப்பாடு குறித்தும் அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிறார்.
சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, நான் ரொம்ப தீர்மானமாக அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதால்தான் ரொம்ப ஸ்ட்ராங்காக கருத்துக்களை முன் வைக்கிறேன். நான் அரசியலில் இணைய போவதாக இருந்தால் காசு வாங்கிட்டு அப்படியே சைட்ல போயிடலாம் இல்லையா? இதுவரைக்கும் அந்த மாதிரி நிறைய கட்சிகளிலிருந்து அழைப்பு வந்திருக்கு. நேத்து நைட் கூட சத்தியமா 11 மணிக்கு ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது.
இன்னும் 6 மாதம் தான் இருக்கு. வந்து சேர்ந்தீங்கன்னா பதவிக்கு வரலாம் என்றெல்லாம் சொன்னாங்க. நீங்க ஒரு 1000 கோடி கொடுத்தீங்கன்னா 100 கோடியில் படம் எடுத்துட்டு மீதியை திரும்ப கொடுத்து விடுவேன். தவிர அவ்வளவு பணத்தை வைத்து என்ன பண்றதுன்னு எனக்கு தெரியாது. அதனால இப்போதைக்கு அரசியலுக்கு போற ஐடியா இல்லை என்று நடிகர் பார்த்திபன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். நடிகர் விஜயின் டிவிகேவில் இணைந்து விட்டீர்களா என்ற கேள்விக்கு தான் இப்படி ஒரு அதிரடி பதிலை நடிகர் பார்த்திபன் தந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





