தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு வெள்ளை படங்கள் காலகட்டமாக இருந்தபோது, ராஜா காலத்து படங்கள், மன்னர் வரலாறு கதை படங்கள் அதிகமாக வெளிவந்தன. அப்போது அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், உத்தம புத்திரன், கர்ணன், காஞ்சித்தலைவன், மகாதேவி என பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அதன்பிறகு 1980 காலகட்டத்தில் சமுதாயம் சார்ந்த படங்கள், குடும்ப படங்கள், சண்டை படங்கள், காமெடி படங்கள் குறிப்பாக காதல் படங்கள் அதிகளவில் தமிழ் சினிமாவில் வரத் தொடங்கின. அதற்குபிறகு கடந்த சில ஆண்டுகளாக மன்னர் கால ராஜா கதை படங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது பாகுபலி படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், சுதீப் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் 2 பாகங்களாக வெளிவந்து 2 பாகங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் எதிரொலியாக தான் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்தது மூலம் பான் இந்தியா ஸ்டார் நடிகராக இந்தியா முழுவதும் பேசப்படும் முன்னணி நடிகராக நடிகர் பிரபாஸ் மாறி இருக்கிறார். அந்த அளவுக்கு பாகுபலி படம் பிரபாஸுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. இவர் தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டில் ஈஸ்வர் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்.
அதைத்தொடர்ந்து 2004ம் ஆண்டு வெளியான வர்ஷம் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் சத்ரபதி, ரிபெல் போன்ற படங்களை கொடுத்த பிரபாஸூக்கு ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின் இந்தியில் பிரபல முன்னணி நடிகையான தீபிகா படுகோனுடன் நடிக்க வந்த வாய்ப்பை பிரபாஸ் மறுத்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பத்மாவத்.
இந்த படத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தில் சாகித் கபூர் நடித்த ராஜபுத்திர மன்னரான மகாராவல் ரத்தன் சிங்கின் கதாபாத்திரத்தில் முதலில் பிரபாஸ்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பிரபாஸ் அந்த கேரக்டரில் நடித்த மறுத்துவிட்டார். பிரபாஸ் அப்போது பாகுபலி 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாகவும், பாகுபலி கேரக்டரை போல் இந்த பாத்திரம் தனித்து நிற்கும் முக்கிய கதாபாத்திரமாக இல்லை என்பதற்காகவும் இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின் இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





