தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இதுவரை அவர் நடித்த 68 படங்கள் வெளியாகி விட்டன. கடைசியாக அவர் நடித்த 69வது படம் ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கரூர் துயர சம்பவம் காரணமாக அந்த படம் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தை அறிவித்த போதே நடிகர் விஜய் தி கோட் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நான் நடிப்பேன் என்றும் அப்போதே கூறிவிட்டார். அந்த படம்தான் இப்போது ஜனநாயகன் படமாக வெளிவர உள்ளது. இனி முழுநேர அரசியல்தான் என்ற முடிவில் விஜய் இருப்பதால் அடுத்து தமிழ் சினிமாவில் விஜய் இடத்தை பிடிக்கப் போகிறவர் யார் என்பது ஹாட் டாபிக் ஆக இருந்து வருகிறது.
தி கோட் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அப்போது நடிகர் விஜய், அவரிடம் துப்பாக்கியை கொடுப்பார். விஜய் நடித்த படம் துப்பாக்கி பெரிய ஹிட் என்பதால் இந்த காட்சி மூலம் சிவகார்த்திகேயன்தான் இனி அடுத்த விஜய் என்ற தகவல் பரவியது. அதை விஜயே சிம்பாலிக் ஆக கூறிவிட்டார் என்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதே போல் சிலம்பரசன் சூர்யா தனுஷ் விஜய் சேதுபதி சியான் விக்ரம் போன்றவர்களும் விஜய் இடத்தை பிடிக்க போட்டியிடுகின்றனர் என்ற தகவல் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த சூழலில் டியூட் படத்துக்கான பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம், தமிழ் சினிமாவில் அடுத்த விஜய் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, நடிகர் விஜயின் இடத்தை சினிமாவில் யாராலுமே நிரப்ப முடியாது. அவர் இந்த உயரத்தை தொட்டதற்கு காரணமே அவரிடம் 30 வருட உழைப்பு இருக்கிறது. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் அவர்கள் எல்லாம் இன்று இவ்வளவு வெற்றி அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.
அதற்கு அவர்கள் நடித்த படம் கதையெல்லாம் காரணம் இல்லை. ரசிகர்கள் தான் முக்கிய காரணம். அடுத்து யார் அந்த உயரத்தை தொடுகிறார்கள் என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிப்பார்கள். அதை இன்னும் 30 வருடங்களில் பார்க்கலாம் என்று பிரதீப் ரங்கநாதன் வெளிப்படையாக பதிலளித்து இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.





