நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் ஒரு மிகச்சிறந்த வில்லன் நடிகராக தன்னை வெளிப்படுத்தியவர். பல படங்களில் அவரது வில்லத்தனமான நடிப்பு தான் அந்த படத்தையே மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது என்றால் அது மிகை அல்ல. குறிப்பாக விஜய் படங்களில் பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் செய்து பெரிய அளவில் அந்த படங்கள் வெற்றி பெற்று இருக்கின்றன.
குறிப்பாக கில்லி படத்தை உதாரணமாக சொல்லலாம். அதேபோல் போக்கிரி படத்திலும் அவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரகாஷ்ராஜ் ஆளுமை மிக்க ஒரு நடிகராக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதுமை காரணமாக படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டாலும், பிரகாஷ்ராஜ் அவ்வப்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார்.
வில்லத்தனமான நடிப்பு மட்டுமின்றி, சமீபமாக குணசித்திர நடிப்பிலும் பிரகாஷ்ராஜ் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் மொழி, உன் சமையல் அறையில், மாநிறம் வயது 60 போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அந்த படங்களிலும்பிரகாஷ்ராஜ் நடிப்பு வெகு சிறப்பாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கில்லி படத்தை தொடர்ந்து வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை பிரகாஷ்ராஜ் முன்வைத்து வருகிறார். பிரதமர் மோடி ஒரு தகுதியான தலைவர் இல்லை என்றும், மத்திய அரசின் செயல்பாடுகளால் இந்திய மக்களுக்கு எவ்விதமான நன்மையும், முன்னேற்றமும் கிடைக்கவில்லை என்றும் வெளிப்படையாகவே அவர் பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் அண்ணாமலை போன்றவர்கள் எல்லாம் உருவாகி இருக்க மாட்டார்கள். கணவனும் மனைவியும் இப்போது அந்த கட்சியில் இணைந்து இருக்கின்றனர். பாவம் அவர்களுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை என்றும் வில்லங்கமாக பேசி இருக்கிறார்.
அவர் குறிப்பிட்டு சொல்வது நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமாரை தான். சமீபத்தில் பாஜகவில் இணைந்து கூட்டணி சேர்ந்த நிலையில், பாஜக கூட்டணியில் சமக வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் ராதிகா வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். நடிகர் சரத்குமார், பிரகாஷ்ராஜ் இப்படி பேசியதற்கு விரைவில் பதில் தருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.





