ஆந்திராவில் துணை முதல்வராக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சொந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபல வில்லன் நடிகராக ரசிகர்களிடம் அதிக பாராட்டைப் பெற்றவர். அரசியிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் விஜயுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கில்லி போக்கிரி வாரிசு போன்ற படங்களில் விஜயுடன் அவர் வில்லனாக நடித்து பெரிய அளவில் பாராட்டை பெற்றிருக்கிறார். இப்போதும் பல தமிழ் படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது, பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் ரசிகர்கள் பட்டாளத்தை மட்டுமே தொண்டர்களாக கொண்டவர். அவர் இதனை ஏற்காமல் போகலாம். ஆனால் இதுதான் உண்மை.
அதே போல் நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். விஜய் தனது நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்கு முன்பே அவரை அறிமுகப்படுத்தி ஏராளமான படங்களை எஸ்ஏசி தயாரித்தவர். பவன் கல்யாண் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர். விஜய் அரசியலுக்கு புதியவர்.
நான் அவர்களோடு படங்களில் நடித்த போது ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாக பேசியது இல்லை. அவர்கள் நடிகர்கள். அந்த பிரபலத்தை காரணமாக வைத்து அரசியலில் நுழைந்தனர். இருவரிடமும் தெளிவான அரசியல் பார்வையோ அல்லது மக்கள் பிரச்னைகள் குறித்த புரிதலோ இல்லை. பவன் கல்யாண் கட்சி தொடங்கி 10 ஆண்டுகளில் அவரிடம் ஒரு தொலைநோக்குப் பார்வையோ அல்லது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தோ புரிதல் இருப்பதை நான் பார்த்ததில்லை.
அதை நான் விஜயிடமும் காணவில்லை ஆனால் பவன் கல்யாண் அல்லது விஜய் போன்றவர்கள் அரசியலில் நுழையும் போதே மக்கள் இருக்கும் அமைப்பில் ஒரு வெற்றிடத்தை தேடுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சில இடங்கள் கிடைக்கக்கூடும். ஆனால் பின்பு அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும் பேச்சை கேட்கிறேன். ஆனால் எப்படி போராடுவது என்பதில் ஆழமான புரிதல் அவருக்கு இல்லை. பவன் கல்யாண் பிரபலமான நடிகர் என்பதால் நாட்டின் தலைவிதியை அவரது கைகளில் கொடுக்க வேண்டுமா? அவர் தனது சித்தாந்தத்தில் சீறற்றவர் என்று நடிகர் பிரகாஷ் பேசியிருக்கிறார்.





