திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக ஆட்சி நடந்து வருகிறது. இதில் இடதுசாரி கட்சிகள் தரப்பில் கடும் அதிருப்தி நிலவுவதால் இடைத்தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் ஆதரவை வாபஸ் பெறும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
நாங்கள் தவெக ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால் அமைச்சரவையும் இருக்காது, சட்டசபையும் இருக்காது. எப்போது அது நடக்கும் என்று கவர்னர் காத்துக்கொண்டு இருக்கிறார் என்று வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். மேலும் மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனியாக தங்களது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இந்த நிலையில் முதல்வர் விஜய்க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதிய தலைமை செயலகம் ரூ. 1200 கோடியில் கட்டும் திட்டம், லண்டனில் நடிகை திரிஷாவுடன் கார் ரேஸ்சில் பங்கேற்றது, எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார், கேஸ் சிலிண்டர் 6 என அறிவித்துவிட்டு 3 மட்டும் தருவதாக அறிவித்தது, விவசாயிகள் பயிர்கடன் ரத்து ஏமாற்றம் என பல விஷயங்களில் விஜய் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக திமுகவை விமர்சிப்பதை மட்டுமே முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள் தங்களது குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றனர். மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் ஆலோசிப்பதில் அக்கறை இல்லை. தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு இல்லை. மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பல விவகாரங்கள் தவெகவுக்கு எதிராக மாறியுள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது, தவெக ஆட்சி அமைத்து 120 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. புதுசா வந்திருக்கிறார்கள். எல்லாரும் இளைஞர்களாக இருக்கிறார்கள். ஏதோ வித்தியாசம் வேண்டும் என்று மக்கள் தவெகவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
ஒரு வருடம் டைம் கொடுங்கள். அதற்குள் ஏன் குதிக்கிறீங்க? ஓட்டு போட்டவங்க போடாதவங்க எல்லாருக்கும் அவர்தான் சிஎம். 120 நாட்கள் தான் ஆகிறது ஆட்சி குறித்து கருத்து சொல்ல ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





