பொதுவாகவே சுவை மிகுந்த ருசியான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவது தான் மனிதர்களின் இயல்பாக உள்ளது. இதில் சிலர் சாப்பாட்டு ராமன்களாகவே இருக்கின்றனர். அதிலும் சினிமா நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களுக்கு விருப்பமான உணவுகளை மிகவும் ரசித்து சாப்பிடுவது வழக்கம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்டோர் அசைவப் பிரியர்களாக இருந்தவர்கள்.
அவர்களது தினசரி உணவில் எப்படியும் அசைவம் நிச்சயமாக இருக்கும். அதேபோல் இன்றைய நடிகர்களில் ரஜினி கமல் சத்யராஜ் பிரபு விஜய் சிவகார்த்திகேயன் என பலரும் விருப்பமான உணவுகளை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான நடிகர்களுக்கு பிரியாணி என்பது மிகவும் விரும்புகிற அசைவ உணவாக இருக்கிறது.
அசைவ பிரியர்களின் முதல் தேர்வு பிரியாணி என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. நடிகர் ஆர்யா தனது நண்பர்களான கார்த்தி விஷால் ஜீவா சந்தானம் போன்றவர்களுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து வைத்து அசத்தி விடுவது வழக்கம். அதேபோல் நடிகர் அஜீத்குமார் படப்பிடிப்பு தளத்தில் சிக்கன் பிரியாணி செய்து தந்து படக்குழுவினரை உற்சாகப்படுத்தி விடுகிறார்.
அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு பிரியாணி பிரியர். சமீபத்தில் ஒரு விழா மேடையில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது, பிரியாணி என்றால் மட்டன் பிரியாணி தான். சிக்கன் பிரியாணி எப்படி வந்தது தெரியுமா? அந்த பிரியாணி மசாலா போடும் போது ஒரு ஏழெட்டு கோழிக்கு வாழ்க்கையே பிடிக்காம போய் அதுல விழுந்துடிச்சு. அதுதான் சிக்கன் பிரியாணி என வந்தது.
சிக்கன் சாப்பிடாதவங்க கண்டுபிடிச்சது தான் வெஜிடபிள் பிரியாணி. நான் யாராவது மீது கோபம் வந்தால் போடா வெஜிடபிள் பிரியாணி என்றுதான் திட்டுவேன். ஒரு வீட்டில் பங்க்ஷனுக்கு கூப்பிட்டு இருந்தாங்க. நான் அங்க பிரியாணி சாப்பிட்டுட்டு இருந்தேன். பிரியாணிக்கு அப்புறம் எதுவும் சாப்பிடக் கூடாது. நானும் சாப்பிட மாட்டேன்.
அங்கிருந்த ஒரு அசிஸ்டென்ட், சார் இது சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒயிட் ரைஸ் இருக்கு ஒயிட் ரைஸ் இருக்குதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். யோவ் பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறம் என் காதலி தர்ற முத்தத்தை கூட நான் வாங்க மாட்டேன் போய்யான்னு அவன்கிட்ட சொல்லிட்டேன் என்று அந்த மேடையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஜாலியாக பேசியிருக்கிறார்.





