நடிகர் பிரசாந்த், நடிகர் தியாகராஜனின் மகன். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது தந்தை தியாகராஜன் 1980களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். மலையூர் மம்பட்டியான், தீச்சட்டி கோவிந்தன், கொம்பேறி மூக்கன், நீங்கள் கேட்டவை போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் வில்லனாகவும் நடித்தார்.
தந்தையை போலவே, மகன் பிரசாந்தும் நடிப்பில் படுகெட்டிக்காரராக இருந்து ரசிகர்கள் மனம் கவர்ந்தார். வைகாசி பொறந்தாச்சு படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா, செந்தமிழ் செல்வன், ராசாமகன், கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரசாந்த், சொந்த வாழ்வில் பெரிய சறுக்கலை சந்தித்தார். அவரது திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சினிமா வாழ்வில் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார். தொடர்ந்து அவரது படங்கள் சரியாக ஓடாமல் பின்னடைவை சந்தித்தார். சினிமாவை விட்டு பல ஆண்டுகளாக ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அவர் தனது 2வது சுற்றை ஆரம்பித்திருக்கிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசாந்த் நடித்திருக்கிறார். 51 வயதிலும், விசில் போடு பாடலில் அவரது சுறுசுறுப்பான நடனத்தை பார்த்த ரசிகர்கள், பிரசாந்த் பழைய மெருகு குறையாமல் இருக்கிறார் என்று புகழ்ந்தனர்.
இதற்கிடையே பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் படம், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன் நடித்திருக்கிறார். தங்கலான் படம் வெளியாகும் அதே நாளில் அந்தகன் ரிலீஸ் ஆகிறது. இதில் விக்ரம், பிரசாந்த் நெருங்கிய உறவினர்கள் அத்தை மகன், மாமா மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பிரசாந்திடம் 2026 சட்டசைப தேர்தல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாந்த், 2026 தேர்தலில் எனது அரசியல் பயணம் குறித்து பிறகு பேசலாம். அந்த தேர்தலை பொருத்த வரை, மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கே என் ஆதரவு என்று கூறியிருக்கிறார். அவர் மறைமுகமாக நடிகர் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.





