தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் முன்னணி நாயகிகளாக நடித்துக்கொண்டு இருப்பவர்கள் 2 பேர்தான். ஒருவர் திரிஷா, மற்றொருவர் நயன்தாரா. ஆனால் திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடித்த படங்கள் வெகுவாக குறைந்து விட்டது. கடைசியாக அவரது 75வது படம் அன்னபூரணி வந்தது.
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி திரிஷா நடித்து வருகிறார். விஜயுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். தி கோட் படத்தில் விஜயுடன் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். விடாமுயற்சி குட்பேட் அக்லி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா, சூர்யாவின் 45வது படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் நடிகை திரிஷா நடித்த ஐடென்டிட்டி என்ற படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரிஷா டொவினோ தாமஸ் வினய் ராய் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகி உள்ளது. கோகுலம் சினிமா நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது .அதில் அகில்பால் அனஷ்கான் ஆகியோர் இந்த படத்தை இயக்கியுள்ளனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
ஐடென்டிட்டி படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற படத்தின் நாயகி நடிகை திரிஷா பேசியதாவது, முதல் தடவையாக ஒரு மலையாள படத்தின் மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக மலையாள படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கிறது என்று நான் ஏற்கனவே நிறைய முறை சொல்லியுள்ளேன். எனக்கு மலையாள படங்கள் ரொம்ப பிடிக்கும். மலையாள படங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது.
ஆண்டுக்கு ஒரு மலையாள படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த படத்தின் வாய்ப்பு எனக்கு வந்தது. இந்த படத்தின் புத்திசாலித்தனமான திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. மலையாளத்தில் மிகப்பெரிய கதாநாயகன் டொவினோ. அவர் தேர்வு செய்யும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக சிறந்த அனுபவமாக இருந்தது.
அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக பணிகளை செய்வார். வினய் ரொம்ப காலமாக எனக்கு தெரியும். இந்த படம் மிக மிக நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது. நாங்கள் ஷூட் செய்யும் போதே இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. மலையாளத்தில் எப்போதும் பெண்களுக்கு நல்ல கேரக்டர்கள் எழுதுவார்கள். இந்த படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களும் இந்த படத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன் என்று திரிஷா பேசியிருக்கிறார்.





