பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், பாடகர், தயாரிப்பாளர் இயக்குனராகவும் உள்ளார். தமிழில் கனா கண்டேன் சத்தம் போடாதே கண்ணாமூச்சி ஏனடா நினைத்தாலே இனிக்கும் வெள்ளித்திரை பாரிஜாதம் அபியும் நானும் ராவணன் உருமி என பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்தாண்டில் வெளியான இவரது ஆடுஜீவிதம் படம் பெரிய வெற்றியை பெற்றது. அரபு நாட்டுக்கு வேலை தேடி செல்லும் ஒரு இளைஞன், கடைசியில் ஆடு மேய்க்கும் வேலைக்கு சென்று அங்கு பாலைவனத்தில் சிக்கிக்கொண்டு படும் துன்பங்களை மிகவும் அழுத்தமான சொன்ன படமாக இது இருந்தது. அதிலும் பிருத்விராஜ் நடிப்பு வேற லெவலில் ரசிகர்களின் மனம் கவர்ந்தது.
மலையாளத்தில் லூசிபர் என்ற படத்தை பிருத்விராஜ் இயக்கினார். அந்த படத்தை இயக்கிய பிறகு மிகப்பெரிய இயக்குனராகவும் பிருத்விராஜ் மாறிவிட்டார். நடிகர் மோகன்லாலை ஹீரோவாக தனது முதல் படத்தில் இயக்கிய அவர், மீண்டும் அவர் மோகன்லால் நடிப்பில் ப்ரோ டாடி என்ற படத்தையும் இயக்கினார்.
அதன் பிறகு இப்போது லூசிபர் படத்தின் 2ம் பாகமாக எம்புரான் படத்தையும் டைரக்ட் செய்து முடித்து விட்டார். இந்த படம் வருகிற மார்ச் 27ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந் நிகழ்ச்சியில் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் மம்முட்டி, இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற நடிகர் பிருத்விராஜ் பேசுகையில், நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி டிரெய்லரை நீங்கள் பார்த்து விட்டீர்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் பார்த்து விட்டேன். தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான மிகச் சிறந்த டெய்லர்களில் இதுவும் ஒன்று. மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். நிச்சயமாக அடித்து நொறுக்கும் வெற்றியை விடாமுயற்சி படம் பெறும் என்று புகழ்ந்துள்ளார்.
விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், எம்புரான் படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் அடிப்படையில் தான் பிருத்விராஜ் விடாமுயற்சி படத்தின் டிரெய்லரை பாராட்டி இருப்பதாக கூறப்படுகிறது.





