தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல தரமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் ராதா ரவி. எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை தந்து விடுவார். நடிகவேள் எம்ஆர் ராதா மகன். நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷா ராம்கி இருவரும் இவரது சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ராதாரவிக்கு சின்ன சின்ன கேரக்டர்தான் கிடைத்தது. நடிகவேள் எம்ஆர் ராதா மகன் என்பதற்காக தமிழ் சினிமாவில் யாரும் ராதாரவிக்கு பெரிய அளவில் வரவேற்பு தரவில்லை. ஆனால் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர், ராதாரவிக்கு தனது படங்களில் நல்ல வாய்ப்பளித்து அவரை முன்னிலைப்படுத்தினார்.
இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராதாரவியே வெளிப்படையாக கூறி, எனக்கு கடவுள் போல அந்த காலகட்டத்தில் உதவியவர் டி ராஜேந்தர் என்று கூறி தனது நன்றியை தெரிவித்து இருந்தார். ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல்களில் அதிகமாக நடித்த ராதா ரவி ஒரு கட்டத்தில் சில படங்களில் நாயகனாக நடித்தார். சின்ன மாப்ளே போன்ற சில படங்களில் காமெடி ரோலும் செய்திருந்தார்.
கடந்த பல ஆண்டுகளாக நாயகி அல்லது நாயகனின் அப்பா அண்ணன் கேரக்டர்கள் போலீஸ் வக்கீல் அரசியல்வாதி பண்ணையார் கேரக்டர்களிலும் ராதா ரவி நடித்து வருகிறார். ராதா ரவி போன்ற திறமையான நடிகரை சில இயக்குனர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதா ரவி கூறியதாவது, நானெல்லாம் சாகிற வரைக்கும் நடிக்கணும், எனக்கு அது தான் ஒரே ஆசை. இந்த டைரக்டர் ஆவது எல்லாம் என்னால முடியாது. என்னை எல்லோரும் ஏன் நீங்க டைரக்ட் பண்ணலையா என்று கேட்டார்கள். நான் பாக்யராஜ் சாரை எல்லாம் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்.
நான் டைரக்ட் பண்ணுவேன். இருந்தாலும் நான் ஏதாவது பண்ணிடுவேன் என்று பயப்படுகிறேன். ஏன்னா எனக்கு இருக்கிற கோபம் அப்படி. சரியா நடிக்கவில்லை என்றால் உங்களை மாதிரி ஒன்ஸ்மோர் எல்லாம் கேட்க மாட்டேன். இவன் கதையை முடிச்சிட்டு வேற ஒரு ஆள் போடறா என்று சொல்லுவேன் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





